விழுப்புரத்தில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவி - காத்திருந்த கணவர்
செமஸ்டர் தேர்வை எழுத மனைவியை அழைத்து வந்த கணவன். திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுத வந்த மாணவி.
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் வந்த யுவஸ்ரீ என்ற மாணவி செமஸ்டர் தேர்வு எழுதினார்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ. 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார். மாணவிக்கு (ஜூன் 9) இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு ( ஜூன் 9 ) நடைபெற்றது. இதனை யுவஸ்ரீ எழுத முடிவு செய்தார். அதன்படி, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர், மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று, தேர்வு எழுதினார்.
மாணவியின் கணவருமான சக்திவேல் மனைவிக்கு உறுதுணையாக கல்லூரிக்கு வந்தார். ‘நீ போய் நிச்சயமாக தேர்வு எழுத வேண்டும்” எனக் கூறி மனைவியை தேர்வறை வரை விட்டு சென்று மனைவிக்காக காத்திருந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், யுவஸ்ரீயை கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர். இதுகுறித்து யுவஸ்ரீ கூறுகையில், மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த அனுபவம் மிக சுவாரசியமாக இருந்தது. நிச்சயமாக எந்த விதத்திலும் என்னுடைய படிப்பிற்கு திருமணம் தடையாக இருக்காது. நான் அனைத்து தேர்வுகளையும் கண்டிப்பாக எழுதி நல்ல வேலைக்கு செல்வேன்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்