தீபாவளி: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கம். விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் அக்டோபர் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம் திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு 190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் எந்தெந்த ஊர்களுக்கு புறப்படும் என்ற தகவலை பேனர் மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழுப்புரம் மண்டலத்தை சார்ந்த விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்பட், போளூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கும், கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி (வழி) ஈசிஆர் கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோயிலூர், திட்டக்குடி, திருச்சி மற்றும் சேலம், விழுப்புரம், போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதே போன்று தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் வகையில் பொது மக்களுக்காக வருகின்ற அக்டோபர் 24-முதல் 27 ஆகிய தேதிகள் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் விழுப்புரம் மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.