ஒரே வளாகத்தில் 800+ மாணவர்கள் தங்கும் வசதி: மாதிரிப் பள்ளி பணிகளை முடுக்கிவிட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான்
விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவது மற்றும் கெடார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டடப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவது மற்றும் கெடார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டடப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் நகராட்சி பழைய உரக்கிடங்கு அருகில் விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் 4.56 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 2.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர், விழுப்புரம் நகராட்சி ஆணையர் மற்றும் விழுப்புரம் நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ், மாநில அரசு மற்றும் நபார்டு திட்டத்தின்கீழ், மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் வட்டம், கெடார் ஊராட்சியில், மாநில அரசு மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டடம் மற்றும் மாணவ மற்றும் மாணவியர் விடுதி தலா ரூ.18.57 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் விடுதிகளுக்கான கட்டடப்பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டடமானது தரைதளத்துடன் இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இதில், 22 வகுப்பறைகள், 1 நூலகம், 1 வரைபட அறை, 2 கணினி அறைகள், 3 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அறை, 1 பல்நோக்கு அரங்கம், 1 தலைமையாசிரியர் அறை மற்றும் 1 அலுவலக அறை உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவ மற்றும் மாணவியர் தனி விடுதி கட்டடமானது தரைதளத்துடன் ஐந்து தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 416 மாணவர்கள் மற்றும் 416 மாணவியர்கள் தங்கி கல்வி பயில்வதற்கான அறை வசதிகள் உள்ளது. இந்த விடுதியில், தங்கும் அறை, பொதுவான அறை, நூலகம், சமையல் அறை, காப்பாளர் அறை, கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர், வளாகத்தினைச் சுற்றி உயர்மின் கோபுர விளக்குகள், வளாகம் முழுவதும் சிமெண்ட் சாலை, சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாதிரி பள்ளி கட்டடம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டுமானப்பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கெடாரிலிருந்து செல்லங்குப்பம் பள்ளி வளாகம் வரை தார்சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, சாலை அமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.





















