Villupuram: மேல்பாதி திரெளபதி கோயில் விவகாரம்: 7ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணை
விழுப்புரம்: மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் 2ஆம் கட்ட விசாரணை வருகின்ற 7ஆம் தேதி நடைபெறும்
விழுப்புரம்: மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 2ஆம் கட்ட விசாரணை வருகின்ற 7ஆம் தேதி நடைபெறும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் கோயில் உள்ளே நுழைந்து சாமிதரிசனம் செய்வது தொடர்பாக இருசமூக மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமூக தீர்வு காண 7 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால் கடந்த ஜூன் 7 ஆம் தேதி கோயிலுக்கு ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பட்டு இவ்விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இருத்தரப்பினரிடையேயும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். அப்போதும் சுமூக முடிவு எட்டப்படாததால் 2ஆம் கட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்
வருகின்ற 7ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணை நடைபெறும் என ஆர்.டி.ஓ பிரவினா குமாரி கூறியுள்ளார்.
இந்த விசாரணையின் போது, ஒரு சமூக தரப்பைச் சேர்ந்த 5 பேர் மட்டும் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ உத்தரவிட்டு சம்மன் அனுப்பி வைத்துள்ளார். உரிய காரணமின்றி விசாரணைக்கு ஆஜராக தவறினால் பிடிக்கட்டளை பிறப்பிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் விவகாரத்தில் இருதரப்பையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்