பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - வைரலாகும் புகைப்படம்
விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கழிவறையை தூய்மை செய்து மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுநாள் திறக்கப்படுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் பள்ளி வகுப்பறைகள், வளாகம் சுத்தம் செய்யும் பணியை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்து கழிவறையிலுள்ள கை அலம்பும் இடத்தினை சுத்தம் செய்தது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 13 ஆம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ‘நம் குப்பை நம் பொறுப்பு’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளின் வளாகத்தில் உள்ள குப்பைகள் மற்றும் இலை சருகுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருத்தல், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தேக்க தொட்டி மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள கிராம தூய்மைப்பணியாளர்கள், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை இன்றும் நாளையும் மேற்கொள்கின்றனர்.
சுத்தம் செய்யும் பணியை முன்னிட்டு விழுப்புரம் நகர பகுதியான மருத்துவமனை வீதியிலுள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆட்சியர் மோகன் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளியை சுத்தம் செய்த பணியாளர்கள் சரிவர கழிவறையை சுத்தம் செய்யாததால் பணியாளர் மீது கோபமடைந்த ஆட்சியர் மோகன் கடமைக்கென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என கூறி கழிவறையில் உள்ள கை அலம்பும் இடத்தினை தனது கையால் ஆட்சியர் சுத்தம் செய்தார்.
அதன் பிறகு அனைத்து பள்ளி கழிவறைகள் வகுப்பறைகளை தனது வீட்டினை போன்று சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் இதனை கன்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 1806 பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிப்பதால் கூடுதல் ஆசிரியர்கள் பள்ளிகளில் அமர்த்தவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக ஆட்சியர் மோகன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்