செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் செய்த காரியம் - திண்டிவனம் அருகே சோகம்
திண்டிவனம் அருகே செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தற்கொலை.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே விலை உயர்ந்த செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் வெற்றிவேல் (வயது 16). இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக தனது பெற்றோரிடம் விலை உயர்ந்த செல்போன் வாங்கி தரச்சொல்லி கேட்டு அடம் பிடித்துள்ளார். ஆனால் அதற்கு வெற்றிவேலின் பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வெற்றிவேல் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவ்வழியாக வந்த அக்கம் பக்கத்தினர் வெற்றிவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வெற்றிவேலின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோசனை காவல் நிலைய போலீசார் வெற்றிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)