Urban Local Body Election 2022: வாக்குச்சாவடிகளை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதால் விழிப்புடன் இருக்க வேண்டும் - அதிமுகவினருக்கு சி.வி.சண்முகம் அறிவுரை
’’மாற்றத்தை எதிர்ப்பார்த்து தான் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள் ஆனால் வாக்களித்த மக்களின் எதிர்ப்பார்ப்பு பூஜியம் தான்’’
நாட்டு மக்களுக்கும் அதிமுகவிற்கும் நகர்புற தேர்தல் முக்கியம் என்பதை உணர்ந்து அதிமுக வேட்பாளர்கள் கடுமையாக உழைத்து வெற்றிகளை பெற வேண்டும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சி.வி.சண்முகம் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விழுப்புரம் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட கூடிய 42 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நாட்டுக்கு மட்டுமல்ல அதிமுகவிற்கும் இது முக்கியமான தேர்தல் ,அதிமுக ஆட்சி மீண்டும் அமர வேண்டும் அதற்கு இந்த நகராட்சி தேர்தலில் அதிமுக வெற்றி உறுதுணையாக இருக்கும். திமுக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகியும், மாற்றத்தை எதிர்ப்பார்த்து தான் மக்கள் வாக்களித்தார்கள் ஆனால் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு பூஜியம் தான்.
திமுக ஆட்சியில் தற்போது மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் அவை தற்போது அதிருப்தியாக மாறி உள்ளன. அவை கோபமாக மாறும் வாய்ப்புள்ளது, மக்கள் கோபத்தை காட்டும் காலம் வரும். நகராட்சி தேர்தலில் ஆளும் கட்சி முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதால் மக்கள் மீதோ அவர்களுக்கான திட்டத்தின் மீதோ, நிர்வாகத்தின் மீதோ, திமுக வினருக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரிகளை வைத்து அதிகாரத்தை வைத்து வாக்கு சாவடிகளை கைப்பற்றி வெற்றி பெற தான் திமுகவினர் முயற்சி செய்வார்கள் என குற்றம்சாட்டினார்.
எனவே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விழிப்புடன் இருந்து திமுக தவறு செய்ய இடமளிக்க கூடாது எனவும் அறிவுரை வழங்கிய சி.வி.சண்முகம், நகராட்சி பேருராட்சிகளில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற ஒற்றுமையுடன் உழைத்து பாடுபட வேண்டும் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு கீழ் மருத்துவ படிப்பு பயில வாய்ப்பு பெற்றுள்ள மாணவி விஜயலட்சுமி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் வாழ்த்து பெற்ற மாணவிக்கு சிவி சண்முகம் பரிசுத் தொகையாக ரூபாய் 25,000 வழங்கினார்.