புதுச்சேரி மக்களுக்காக பிரமாண்டமாக தயாரான புதிய பேருந்து நிலையம் - திறப்பு விழா எப்போ தெரியுமா ?
Puducherry New Bus Stand : "புதுச்சேரி நகராட்சி ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு போக்குவரத்து முனையம்" என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயர் பலகையும் வைக்கப்பட்டு தற்போது மிக அழகாக காட்சியளிக்கிறது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம்- Pondicherry New Bus Stand
புதுச்சேரியில் 1980 ஆண்டு மறைமலை அடிகள் சாலையில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராஜீவ்காந்தி பேருந்து நிலையம் காலப்போக்கில் கடும் இடநெருக்கடியை சந்தித்தது. இதை இடித்துவிட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.29.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் ஒருபுறம் தொடங்கி நடக்க, தொடர்ந்து அதே பகுதியில் பேருந்து நிலையம் இயங்கப்பட்டது. ‘பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 16-ம் தேதி பேருந்து நிலைய வளாகம் முற்றிலுமாக காலி செய்யப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்துக்கு திருப்பி விடப்பட்டு, அங்கு தற்போது வரையில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள்
இதன்பிறகு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் போக்குவரத்து முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 31 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பகம், 4 போக்குவரத்து அலுவலகம், 3 பயணச்சீட்டு பதிவகம், 6 ஆம்னி பேருந்து அலுவலகங்கள், இரு பயணிகளுக்கான இரவு தங்கும் அறைகள், விசாரணை அலுவலகம், தகவல் மையம், முதலுதவி அறை, கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 46 பேருந்துகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருவதற்கும், செல்வதற்கும் என இரண்டு வழிகள், பொதுமக்கள் வருவதற்கு மைய பகுதியில் தனியாக ஒரு வழி என 3 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 ஆட்டோக்கள் மற்றும் 10 டாக்சிகள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சி ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு போக்குவரத்து முனையம்!
இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், "புதுச்சேரி நகராட்சி ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு போக்குவரத்து முனையம்" என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயர் பலகையும் வைக்கப்பட்டு தற்போது மிக அழகாக காட்சியளிக்கிறது.
பேருந்துகள் எப்படி வந்து, எப்படி செல்ல வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதமே சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதமே திறக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு டிசம்பரில் திறப்பு விழா என்று கூறப்பட்டது. ஆனாலும் திறக்கப்படவில்லை. பணிகளை முடிப்பதில் சற்று தாமதம் ஆனதால் திறப்பு தேதி தள்ளிப் போனது. இப்பணிகளை மேற்கொண்டு வந்த தேசிய கட்டுமான கழகம் தனது தரப்பு பணியை முடித்து, பேருந்து நிலையத்தை சமீபத்தில் புதுச்சேரி நகராட்சியிடம் ஒப்படைத்துள்ளது.
விரைவில் திறப்பு விழா
அதைத் தொடர்ந்து புதுச்சேரி நகராட்சியும் தனது தரப்பிலான இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திறப்பு விழாவுக்காக பேருந்து நிலைய கோப்பை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி, முதல்வரிடம் தேதியும் கேட்டுள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.





















