Pongal 2024: ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?
ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைப்பார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத பொங்கல் திருவிழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார்மண்டம் கிராமத்தில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைக்கப்பட்ட பின் படையில் இடப்பட்டு ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.
இந்தப் பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது விவசாயம் மட்டுமல்லாது கால்நடைகளும் மற்றும் தலைமுறைகள் தழைத்தோங்கவும் இவ்விதம் செய்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆண்டு தோறும் இந்த பொங்கல் நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
உற்சாக கொண்டாட்டம்
வழக்கமாக பொங்கல் பண்டிகை தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்