புத்தாண்டு கொண்டாட்டம்! புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை! பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்
புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் மணக்குள விநாயகருக்கு விடியற்காலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்று தங்க கவசம் சாத்தப்பட்டது.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதலே அனைவரும் பட்டாசு வெடித்து கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
மணக்குள விநாயகர்:
மேலும் இந்த புத்தாண்டை முன்னிட்டு மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் மணக்குள விநாயகருக்கு விடியற் காலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்று தங்க கவசம் சாத்தப்பட்டது.
புத்தாண்டு அன்று மணக்குள விநாயகரை வழிபட புதுச்சேரி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விடிய காலை முதலே இருந்து வரிசையில் நின்று மணக்குள விநாயகரை வணங்கி செல்கின்றனர். பக்தர்களுக்கு வசதிக்கேற்ப கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு சுவாமியை வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை:
மணக்குள விநாயகரை வழிபட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் எந்தவித அசம்பாவிதங்களை சந்திக்காத வகையில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்தனர். இதே போல் நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டை வரவேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்
பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர். புதுச்சேரி அருகே பஞ்சவடி பகுதியில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ராமர் சன்னதியில் கோ-பூஜைகள், விசேஷ யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 4 மணி அளவில் கோவிலில் உள்ள ஸ்ரீராமர் பாதுகைக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. புத்தாண்டு தின சிறப்பு பூஜைகளையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்ட்டது. விஸ்வரூப ஆஞ்சநேய பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்ற்னர்.
யோகி ஸ்ரீ மஹா லலிதா திரிபுரசுந்தரி
புதுச்சேரி திருச்சிற்றம்பலம் பகுதியில் அமைந்துள்ள யோகி ஸ்ரீ மஹா லலிதா திரிபுரசுந்தரி மற்றும் மஹா வராஹி அம்மனுக்கு புத்தாண்டு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. புதுச்சேரி திருச்சிற்றம்பலம் பகுதியில் அமைந்துள்ளது யோகி ஸ்ரீ மஹா லலிதா திரிபுரசுந்தரி மற்றும் மஹா வராஹி அம்மன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள லலிதா திரிபுரசுந்தரி அம்மனுக்கு புத்தாண்டு பிறப்பையொட்டி சோடஷ தீபாராதனை காட்டப்பட்டு, குங்கும லட்சார்ச்சனையுடன் 1008 சஹஸ்ரநாமம் பாடப்பட்டது. தொடர்ந்து மஹா வராஹி அம்மனுக்கு புத்தாண்டு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. புத்தாண்டு பிறப்பு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஸ்ரீ மகா சக்தி பரிகார வாராஹி
புதுச்சேரி பகவத்சிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி பரிகார வாராஹி அம்மனுக்கு புத்தாண்டு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. புதுச்சேரி கருவடிக்குப்பம் பகவத்சிங் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா சக்தி பரிகார வாராஹி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வராஹி அம்மனுக்கு புத்தாண்டு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. புத்தாண்டு பிறப்பு மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தில் முதல் முறையாக 5-அரை அடி சாய்பாபாவிற்கு சந்தன காப்பு
ஷீரடி மகாராஜா சாய் ஆலயத்தில் முதல் முறையாக 5-அரை அடி சாய்பாபாவிற்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் ஷீரடி மகாராஜா சாய் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஷீரடியில் உள்ளது போல 5 அரை அடியில் மகாராஜா பாபாவாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மகாராஜா சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. புதுச்சேரியில் முதல்முறையாக 5 அரை அடி சாய்பாபாவிற்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.