Veera Muthuvel Father: சந்திராயன் 3க்கு பெருமை சேர்த்த விழுப்புரம் வீர முத்துவேல்.. ஆனந்த கண்ணீரில் தந்தை நெகிழ்ச்சி..!
சந்திராயன் 3 திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டதிலிருந்து தனது மகன் வீட்டிற்கு வராமல் உழைத்ததாக அவரது தந்தை பழனிவேல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்னில் ஏவப்பட்டது. பூமிக்கும் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு இடையே 41 நாட்களுக்கு பிறகு சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவபகுதியில் முதல் நாடாக இன்று வெற்றிகரமாக தரை இறக்கியது.
இந்தியா மற்றும் அல்ல உலக நாடுகள் மிகவும் எதிர்பார்த்த இந்நிகழ்வு இன்று அரங்கேறிய நிலையில் சந்திராயன் திட்ட இயக்குனரின் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் சந்திராயன் விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிரங்கியதை விழுப்புரத்தில் தனது வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்த கண்ணீரில் மகிழ்ந்தார்.
அதனைத்தொடர்ந்து செல்போனில் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சந்திராயன் 3 நிலவில் தரையிரங்கியதை கொண்டாடும் விதமாக தனது உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தார்.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் கூறியதாவது, சந்திராயன் 3 திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டதிலிருந்து தனது மகன் வீட்டிற்கு வரவே இல்லை என்றும், தனது மகளின் திருமணத்திற்கு கூட வர முடியாது என்று அவர் தெரிவித்த போது இந்தியா தான் முக்கியம் அந்த பணியை செய் என்று கூறினேன். இன்று எனது மகன் சாதனை படைத்தது பெருமிதமாக இருப்பதாக தெரிவித்தார். உலக நாடுகளே எதிர்பார்த நிகழ்வு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பழனிவேல் கூறியுள்ளார்.
வீர முத்துவேல் விவரம்:-
வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். பின், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.