புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்கம்: முதல்வர் பெருமிதம்
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்கம்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்காக புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 21 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க தகுதியான குடும்ப தலைவிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் உதவித்தொகை பெற மாநிலம் முழுவதும் சுமார் 71 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது. இதற்காக அரசு முதற்கட்டமாக மாதம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று மாலை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக மாதிரி காசோலையை வழங்கினார்.
ஆளுநர் தமிழிசை பேசியதாவது:-
"பெண்கள் கையில் பணம் இருந்தால் அது சுயநலத்திற்காக அல்லாமல் குடும்பத்திற்காகதான் இருக்கும் என்பதை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது என்ற பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. இது கடந்த 1½ ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட கணக்காகும். இதன் மூலம் புதுச்சேரி முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். தாய்மார்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் முதல் அரசாக இந்த அரசு திகழ்கிறது. இந்த அரசு பெண்களுக்கு மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு பெரிய பரிசு கிடைத்துள்ளது" இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:-
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதுதான். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களது பெயரில் சொத்து பதிவு செய்தால் முத்திரைதாள் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கினோம். இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் அரசுக்கு வருமானம் குறைவு தான். இருந்தாலும் பெண்களுக்கு பெரிய பாதுகாப்பு கிடைத்துள்ளது. தற்போது பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் எதை செய்யலாம் என நினைத்தோம். 55 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கு குறைவான வயதுடைய பெண்களுக்கு அரசின் உதவி ஏதாவது கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1,000 வழங்க முடிவு செய்யப்படடது.
இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய போது 13 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறினார்கள். எனவே மாதம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தோம். தற்போது 71 ஆயிரம் குடும்பத்தினர் இருப்பதாக தெரிவித்தனர். சரியாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கும் வரை முதல் கட்டமாக 50 ஆயிரம் குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு சரியாக நடத்தி முடித்த பின்னர் தகுதி உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும். எங்கள் அரசு பொறுப்பேற்கும் போது முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரமாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மீதம் உள்ள 16 ஆயிரம் பேருக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் யாரும் சாப்பாடு இல்லை என்று சொல்ல கூடாது என்பது தான் எனது எண்ணம். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் மடிக்கணினி, சைக்கிள் வழங்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் விடுபட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுபட்ட அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்படும் மூடப்பட்ட ஆலைகளை திறக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆலைகள் திறக்க முடியாதபடி பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு செட்டில்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. அரசு முதலீடு செய்தால் லாபம் ஈட்ட வேண்டும். சில நிறுவனங்களுக்கு உதவித்தொகை வழங்கினால் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் கொடுத்து நிதியை வீணடித்து கொண்டிருக்கின்றனர். புதுச்சேரியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு அறிவித்த கல்வி உதவித்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படும். சென்டாக் மூலம் தேர்வானவர்களுக்கு கட்டணத்தை கேட்காதீர்கள் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும் சிலர் கேட்டு வருவதாக தெரிகிறது. மாணவர்களின் சிரமத்தை போக்க வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது நிதியை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என முதல்வர் பேசினார். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிப்பதையொட்டி "மகளைக் காப்போம் மகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.