(Source: ECI/ABP News/ABP Majha)
Villupuram Rain: திடீரென மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை ..! விழுப்புரம் மக்களுக்கு குளு குளு காற்று..!
விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை.
கோடை மழை வருமா அல்லது வெயிலின் தாக்கம் தணியுமா என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கதை விட அதிகமாக வீசி வந்தது.
விழுப்புரத்தில் கோடை மழை
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கானை, கோலியனூர், வளவனூர், முண்டியம்பாக்கம் ஜானகிபுரம் அரசூர் என பரவலாக கன மழை பெய்தது இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் என பரவலாக இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழை காரணமாக கோடை வெயிலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
களைகட்டும் குளிர்பானகடைகள்
வெயிலின் தாக்கம் 10 மணிக்கு மேல் இருந்தாலும் அதிகாலை முதலே புழுக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர், இளநீர் மற்றும் குளிர்பானங்கள் அதிகளவில் பருகி வருகின்றனர். மேலும் ஆங்காங்கே திடீர் குளிர்பான கடைகளும் முளைக்கத் தொடங்கியுள்ளது. மக்களிடம் தேவை அதிகரிப்பதால் இளநீர், நுங்கு போன்றவற்றின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.