அரசு மருத்துவமனையில் புதிய சாதனை.. முதல் முறை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை - அதிர்ச்சி தரும் உண்மை
புதுச்சேரியில் வெற்றிகரமான நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு சாதனை.

புதுச்சேரி: இந்திய அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக புதுச்சேரியில் வெற்றிகரமான நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனம், மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக, அதிநவீன 'நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை' (Endoscopic Discectomy) இங்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பிரதாப் வசிகர், ரமேஷ், மற்றும் துபே ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
'எண்டோஸ்கோப்பிக் டிஸ்க்கெடமி' எனப்படும் இந்த சிகிச்சை, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் 'ஹெர்னியேட்டட் டிஸ்க்' (Herniated Disc) எனப்படும் இடைமுனை தட்டு விலகல் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது. இது, மிகச் சிறிய துளை மூலம், குறைவான தழும்புடன் செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சிகிச்சையாகும்.
இந்த சிகிச்சையின் மூலம் நோயாளிகள் மிகக் குறைந்த நாட்களிலேயே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம். மேலும், திசு சேதம் குறைவாக இருப்பதால் மிக விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, பணிக்குச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதுகுறித்து மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவர் தரம்வீர் குமார் துபே கூறுகையில்,
"இந்த சாதனை, அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மருத்துவ முறைகளை கொண்டு வருவதில் எங்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஆகும் அதிக நிதிச் சுமையின்றி, அதே தரமான, நவீன நுண்துளை அறுவை சிகிச்சையை எங்கள் நோயாளிகளுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்றார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ரமேஷ் பேசுகையில்,
"இந்த மைல்கல், எங்கள் எலும்பியல் துறையின் அதிநவீன சிகிச்சை முறைகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அனைவருக்கும் உயர்தர சுகாதார சேவையை சமமாக வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். இந்த முன்னோடியான அறுவை சிகிச்சை, இந்தியாவின் பிற அரசு மருத்துவமனைகளும் இதேபோன்ற தொழில்நுட்பங்களை கையாண்டு, அரசு மருத்துவ நிறுவனங்களின் சிகிச்சைத் தரத்தை மேம்படுத்த ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.





















