விழுப்புரம் அருகே 12ம் நூற்றாண்டு மூத்ததேவி கற்சிலை கண்டெடுப்பு
விக்கரவாண்டி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் 12ம் நூற்றாண்டு மூத்ததேவி கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் - செஞ்சி சாலையில் அமைந்துள்ள கிராமம் பிரம்மதேசம். இங்கு சோழர் காலத்தை சேர்ந்த பழமைவாய்ந்த பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் சிவாலயங்கள் அமைந்துள்ளன. இக்கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் களஆய்வில் ஈடுபட்டார். அப்போது கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் கூறியதாவது:-
பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள மந்தைவெளி பகுதியில் களஆய்வு செய்தபோது முக்கால்வாசி அளவிற்கு மண்ணில் சிலை ஒன்று புதைந்திருந்தது. இதை துர்க்கை என அப்பகுதியினர் வணங்கி வந்தனர். ஆனால் அது மூத்ததேவி சிற்பம் என கண்டறியப்பட்டது. காக்கை கொடியுடனும் மகன் மாந்தன், மகள் மாந்தியுடனும் வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கியும் அமர்ந்த நிலையில் மூத்ததேவி அழகாக காட்சி தருகிறார்.
அவளது இடதுகரம் தொடை மீதும் வலதுகரம் அபய முத்திரையுடனும் அமைந்துள்ளது. வழக்கமான மூத்ததேவி சிற்பங்களில் காணப்படும் பெருத்த வயிறு, அகட்டிய கால்கள் இங்கு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 12-13-ம் நூற்றாண்டு என்பதை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் தொன்மைமிக்கதாகும்.
சங்க காலம் தொடங்கி சோழர் காலம் வரையில் இந்த வழிபாடு இருந்து வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நன்னாடு, பேரங்கியூர், பிடாகம், திருவாமாத்தூர், கொட்டப்பாக்கத்துவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூத்ததேவி சிற்பங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்ட இந்த சிற்பம் பிரம்மதேசம் வரலாற்றுக்கு புதிய வரவாகும். இந்த சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர் கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்