அமைச்சர் பொன்முடியின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோரையாறு தரைப்பாலம் சேதம்
விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடியின் நிதி ஒதுக்கீட்டில் ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் 4 மாதத்தில் சேதம்.
விழுப்புரம் அருகே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைச்சர் பொன்முடியின் நிதி ஒதுக்கீட்டில் ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் 4 மாதத்தில் காணாமல் போனதால் கிராம மக்கள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணையின் முழு கொள்ளவான 119 அடியில் 117 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு 6 ஆயிரத்து 680 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் பாதுக்காப்பு கருதி 6 ஆயிரத்து 680 கனஅடி நீரை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான கோரையாற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே 24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அதன் காரணமாக சேத்தூர் பையூர் அரங்கூர் கொங்கராயனூர் உள்ளிட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்களின் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், பள்ளி கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களுக்கு வேலை செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவையான ஆம்பூலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் 4 கிராம மக்களின் இயலபு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஒவ்வொரு மழையின் போது இக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் கடந்த மழையின் போது கூட சாலை அடித்து செல்லபட்டது. இதனால் தரை பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நிதி ஒதுக்கீட்டில் 24 லட்சம் ரூபாய் செலவில் வெறும் ஆற்று மணலை கொண்டு மேலே ஜல்லியை கொட்டி சாலை அமைக்கப்பட்டதே தற்போது அடித்து செல்லப்பட்டதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொகுதியில் அவரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 24 லட்சம் மதிப்பில் போடப்பட்ட சாலை 4 மாதத்தில் காணாமல் போனது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த சாலை முழுவதுமாக ஆற்றில் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்