மேலும் அறிய
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தீ விபத்து - தொழிலாளி உயிரிழப்பு
ஐந்து தொழிலாளிகள் தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

உயிரிழந்த தொழிலாளி
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில், அதிக தொழில்நுட்ப வசதியுடன், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய நெய்வேலி தெர்மல் பவர் ஸ்டேஷன் - (NNTP) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை, சுமார் 100 டன் அளவிற்கு மேல், குவித்து வைத்திருக்கும் பங்கர் என சொல்லப்படும் இடத்தில் எதிர்பாராத விதமாக, நிலக்கரி தீப்பிடித்து, கரும்புகையுடன் வேகமாக பரவியதால், அப்பகுதியில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் என ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தீ விபத்தில் இன்கோசர்வ் தொழிலாளிகளான சுரேஷ் , செல்வராஜ், திருநாவுக்கரசு, செந்தில்குமார், சுரேஷ் ஆகிய ஐந்து பேரும் சிக்கிக் கொண்டனர். இதில் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, நான்கு தொழிலாளிகளையும், மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தீ விபத்திற்கு காரணம் என்னவென்று நெய்வேலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிதாக தொடங்கப்பட்ட நெய்வேலி தெர்மல் பவர் ஸ்டேஷனில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், எளிதில் தீப்பிடிக்க கூடிய இடங்களில் போதிய மின் தடுப்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால், இச்சம்பவம் அரங்கேரி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு உரிய நிவாரணமும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















