Book Fair Festival: குட் நியூஸ் மக்களே ! விரைவில் புத்தக திருவிழா... எங்கு எப்போது தெரியுமா ?
விழுப்புரம் மாவட்டத்தில், புத்தகக் திருவிழா நடத்துவது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
விழுப்புரம் மாவட்டத்தில், புத்தகக் திருவிழா நடத்துவது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் புத்தகக் திருவிழா
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் (03.01.2025) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களில் வருடந்தோறும் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக புத்தகத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான புத்தகத்திருவிழா நடத்துவது தொடர்பாக, புத்தகத் திருவிழா நடைபெறும் இடம் மற்றும் நடைபெறவுள்ள நாட்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், இப்புத்தகத் திருவிழாவில், புத்தக அரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் பிரமுகர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடுதல், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து சிறப்பு பேச்சாளர்களை அழைத்து சொற்பொழிவு நடத்தச் செய்தல், துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.