மேலும் அறிய
Advertisement
ஆருத்ரா தரிசனம்: வெகு விமர்சையாக நடந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
’’ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்கள். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது’’
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவில் தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க., இந்து முன்னணி, ஆலய பாதுகாப்பு குழுவினர், சிவனடியார்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகே தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் காலை 7 மணி அளவில் கீழ வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
இதையடுத்து அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவா, நடராஜா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர், 2 ஆவதாக சுப்பிரமணியர் தேர், 3 ஆவதாக நடராஜர் தேர், 4 ஆவதாக சிவகாம சுந்தரி அம்பாள் தேர், 5 ஆவதாக சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. பக்தர்கள் வெள்ளத்தில் 4 வீதிகளில் தேர்கள் ஆடி, அசைந்து வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு 4 வீதிகளிலும் பெண்கள் கோலமிட்டு தேர்களை வரவேற்றனர். சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்கவும், பல்வேறு இசை வாத்திய கருவிகளை இசைத்தபடியும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மதியம் 1 மணி அளவில் கஞ்சி தொட்டி முனை அருகில் தேர் நிறுத்தப்பட்டது.
தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் இறக்கப்பட்டு, கோவிலுக்குள் ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 8.30 மணி முதல் விடிய, விடிய லட்சார்ச்சனை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. மாலை 3 மணி அளவில் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதாவது ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்கள். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion