Aadhav Arjuna: ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை - அன்பழகன் எச்சரிக்கை
அதிமுக பொதுச் செயலாளரைத் தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை - புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி: அதிமுக பொதுச்செயலாளரைத் தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் கிழக்கு கடற்கரை சாலை ரயில் வழித்தடம் திட்டம் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கடந்த ஆண்டு திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக மத்திய அரசு சுமார் ரூ 52.13 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்ப கட்ட பணிகளைச் செய்ய மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் திட்ட நிதியை செலவு செய்யாமல் அப்படியே ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துள்ளது.
எதிர்வினை அரசியல் கண்ணோட்டத்துடன் தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒத்துழைக்காமல் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தமிழக திமுக முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்துள்ளார். புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டத்தை சிதைந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் உள்ளடக்கிய இந்த நல்ல திட்டத்தைச் செயல்படுத்த முன்வராத தமிழக திமுக நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு இதில் உள்ள உண்மை நிலையைப் புதுச்சேரி அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
இதற்கான உரிய நடவடிக்கையைத் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் எடுக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரைத் தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என அவர் கூறினார்.
ஆதவ் அர்ஜுனா விவகரம்!
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னதாக, தனியார் விடுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், த.வெ.க. தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தனர். ஆதவ் அர்ஜுனா சிரித்துக்கொண்டே, பா.ஜ.க.வே அ.தி.மு.க.-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும். அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியது.
இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு என அதில் கூறப்பட்டுள்ளது.





















