குளவி கூட்டை அழிக்க பெட்ரோல் ஊற்றியபோது விபரீதம்.. பள்ளி மாணவன் மீது தீப்பற்றி எரிந்து படுகாயம்
மயிலம் அருகே குளவிகூடை அழிக்க பெட்ரோல் ஊற்றிய போது பள்ளி மாணவன் மீது தீப்பற்றி எரிந்து படுகாயம்
விழுப்புரம்: மயிலம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் குளவி கூட்டினை அழிக்க சென்று பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்றவைத்த போது தீ காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள வைரபுரம் கிராமத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்களான ஷர்வீன் ஷாகுல்,ராகுல், பிரதாப் உள்ளிட்ட ஆறு பேர் கிணற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது வைரபுரம் ஏரிக்கரை ஒட்டி உள்ள மதுரை வீரன் கோவிலில் உடைந்த குதிரை பொம்மையின் காலில் இருந்த குளவி கூட்டினை அழித்துள்ளனர். அப்போது குளவி கூட்டினை அழிப்பதற்காக அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் சிறிதளவு பெட்ரோலை மது பாட்டிலில் பிடித்த ஷர்வின் ஷாகுல் துணியால் சுற்றி பிரதாப்பிடம் இருந்த லைட்டரை வாங்கி தீ வைத்துள்ளார்.
இதில் திடீரென்று பாட்டிலின் மீது சுற்றியுள்ள துணி மீது தீ பற்றி வேகமாக பரவியதால் ஷாகுல் பாட்டிலை தூக்கி வீசி உள்ளார். தீப்பிடித்த பாட்டிலானது எதிரே நின்றிருந்த பிரதாப் மீது விழுந்ததில் பிரதாபின் சட்டை முழுவதும் தீப்பிடித்து எறிய தொடங்கியது. உடனே அவசர அவசரமாக அங்கிருந்த சிறுவர்கள் அவரது சட்டையை கிழித்து வீசி எறிந்தனர். இருப்பினும் பிரதாப்பின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்படவே சிறுவர்கள் கூச்சலிட்டனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பிரதாப்பை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரதாப்பிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான வெள்ளிமேடுபேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். குளவி கூட்டினை அழிக்க சென்று பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்றவைத்தபோது தீ காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்