![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: விபத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதி.. லாரி ஓட்டுநர் தலைக்குள் இருந்த மர்மபொருள்..! சிகிச்சையால் நடந்த தவறு!
தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
![Crime: விபத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதி.. லாரி ஓட்டுநர் தலைக்குள் இருந்த மர்மபொருள்..! சிகிச்சையால் நடந்த தவறு! Vellore: Lorry driver admitted to government hospital after accident due to a needle being placed inside head Crime: விபத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதி.. லாரி ஓட்டுநர் தலைக்குள் இருந்த மர்மபொருள்..! சிகிச்சையால் நடந்த தவறு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/07/ff567808cae99a5a6ea2adf0898a34d11686120209240187_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் வயது (45). இவர் நேற்று முன்தினம் (05.06.2023) காலை 5 மணியளவில் மாதனூர் அருகே லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து லாரியின் மீது மோதியுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்ட நிலையில் ரத்தம் வழிவது நிற்கவில்லை. இதனால் தலையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்ததில் கார்த்திகேயனின் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு ‘நட்டு’ ஒன்று இருப்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டை அகற்றியுள்ளனர்.
தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, கார்த்திகேயனின் உறவினர்கள் கூறும்போது; ‘விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் காலை 8 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அப்போது வரை அவருக்கு எந்த முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை. அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டதற்கு சுய நினைவுடன் நன்றாகத்தான் இருக்கிறார் என்று கூறி எரிச்சலூட்டினர்.
அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் தலையில் நாங்கள் சத்தம் போட்டதும் உடனடியாக தையல் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றினர். ஆனால், தையல் போட்ட இடத்தில் இருந்து ரத்தம் வழிவது நிற்காமல் இருந்தது. வேறு வழியில்லாமல் வேறு மருத்துவமனைக்கு செல்வதாக கூறினோம். அதற்கு டாக்டரிடம் பேசிய செவிலியர்கள் பின்னர் நீங்கள் செல்லலாம் என்று கூறி அனுப்பி விட்டனர். தனியார் மருத்துவமனைக்கு வந்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தபோது தலையில் நட்டு இருப்பதை தெரிவித்து அகற்றினார்கள். அரசு மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததுடன் தலையில் நட்டுடன் வைத்து தையல் போட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார். இது தொடர்பாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாப்பாத்தியிடம் கேட்டதற்கு, ‘‘இது குறித்து இன்று மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து விரிவான விசாரணைக்கு பிறகு உண்மைத் தன்மை கண்டறியப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)