திமுக அமைக்கும் கூட்டணியே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெல்லும்: உதயநிதி
திமுக அமைக்கும் கூட்டணியே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வென்று மிகப்பெரிய வெற்றியை பெறும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்பொழுது பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க இளைஞர் அணி முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்து மாதங்களில் 210 பயிற்சி பாசறை கூட்டம் நடத்தியுள்ளோம் இந்த கூட்டமானது திமுகவின் வரலாற்றை இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது. 2019-ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் 40-தொகுதியிலும் வெற்றி பெற்றது போல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40-இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும் அதற்காக இளைஞர் அணி முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
”திமுக தலைமையில் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெல்லும். 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் தமிழக மக்கள் விரட்டியடித்தார்கள். தமிழகம் வரும் பொழுது மோடி திருவள்ளுவரைப் பற்றி பேசுவதும் திருக்குறளைப் பற்றி கூறுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக வளர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இதுவரையில் எதுவும் செய்ததில்லை. நரேந்திர மோடி இதுவரையில் வாயில் வடை சுட்டு வருகிறார். தேர்தல் அறிக்கையில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லைதமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது" என்றார்.
இந்தி திணிப்பை முதல் முதலில் எதிர்ப்பவர் ஸ்டாலின், ஸ்டாலின் இருக்கும் வரை இந்தி திணிப்பு தமிழகத்தில் நடக்காது.தற்போது தமிழகத்தில் ஆரியமா, திராவிடமா என்று பேச ஆரம்பித்து விட்டோம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கொள்கை இல்லாத கட்சி அதனால் தான் நான்காக பிரிந்து கிடக்கிறது. அதிமுகவிற்கு எந்தவித கொள்கையும் கிடையாது அவர்களுக்கு ஒரே கொள்கை திமுகவை எதிர்ப்பது தான், அதிமுவின் அலுவலகமாக கமலாயம் செயல்படுகிறது. சட்டமன்றத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் டெல்லியின் தலைமை எஜமானர்கள் ஏதாவது கூறிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக மக்களுக்காக போராட்டம் நடத்தாமல் இருக்கைகாக போராட்டம் நடத்தியுள்ளனர். தற்பொழுது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை பயன்படுத்தி பாஜக கால் ஊன்றலாம் என நினைக்கிறது ஆனால் நிறைவேறாது என்றார், தமிழகத்தில் திராவிடமும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது" என்று பேசினார்