(Source: ECI/ABP News/ABP Majha)
சிக்கன் பக்கோடாவில் புழுக்கள்.....கடை ஊழியர்களிடம் வாலிபர் வாக்குவாதம் - வைரலான வீடியோ
சிக்கன் பக்கோடாவில் புழுக்கள். கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் வாலிபர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அசனமா பேட்டை கூட்ரோட்டில் கே. எஸ். நாட்டு கோழி கறிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் குமார். இந்த இறைச்சி கடை கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று மாலை சிக்கன் பக்கோடாவை சில வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த சிக்கன் பக்கோடாவில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சிக்கன் பக்கோடா போடும் மாஸ்டரிடமும் இறைச்சி கடையின் ஊழியர்களிடமும் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர் இறைச்சி கடையில் சிக்கன் பக்கோடா போடும் மாஸ்டரிடம் சென்று நீங்கள் கொடுத்த சிக்கன் பக்கோடாவில் புழுக்கள் உள்ளது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க இந்த சிக்கன் பக்கோடாவை நீ சாப்பிடு என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் உங்கள் இறைச்சி கடையில் வைத்துள்ள அனைத்து இறைச்சிகளும் குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் அதனை வருத்து கொடுக்கிறீர்கள் என்றும், இந்த இறைச்சி அனைத்தும் பல நாட்களுக்கு முன்பு வாங்கிய இறைச்சி என்று கூறி வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதிகளில் உள்ள அசைவ உணவகத்தில் உணவில் கலப்படம் ஏற்பட்டதால் ஒரு சிறுமி மற்றும் ஒரு மாணவன் என இரண்டு நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் அசைவ உணவில் புழுக்கள், உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பாக ஆரணி பகுதியில் இயங்கி வரும் பிரபல பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலியின் தலை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஓட்டலுக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் சைவ மற்றும் அசைவ உணவாகங்களில் வழங்கப்படும் வரும் உணவுப் பொருட்கள் மனிதர்கள் உண்ணுவதற்கு தரமற்ற வகையில் உள்ளதையே தொடர் சம்பவங்களாக உள்ளது.
இதனை கண்காணிக்கும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவகங்கள் செயல்பட்டு வருகிறதா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுகிறது. இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்ன பதில் அளிக்க போகிறார்கள் அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள், மாவட்டத்தில் உணவகங்களில் நடைபெறும் தொடர் சம்பவங்களுக்கு கடைகளுக்கு சீல் வைத்தல், அபராதம் விதிப்பது, அவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் கைது செய்வது, என பெயரளவில் அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டும் தான் இதுவரை நடைபெற்று வருகிறது. தொடர் புகார்களுக்கு இத்தகைய சம்பவங்களை தடுக்கும் நோக்கோடு எந்த விதமான கடும் நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. தொடரும் இத்தகைய சம்பவங்களுக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் உள்ளது.