Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
”விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதவ் அர்ஜூனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்
![Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..! Aadhav Arjuna Likely to Cause Division in VCK Party, Says DMK Alliance Leader Eswaran Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/b8c7e6b1ef380971cc9f6abece98ad811732504895934108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரே ஆதவ் அர்ஜூனாவா விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆபத்து என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளது அரசியல் களத்தில் புதிய அனலை கிளப்பியிருக்கிறது.
ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக விசிக நிர்வாகிகள் ?
ஆதவ் அர்ஜூனா கட்சியில் இணைந்தப்பிறகு நிர்வாகிகள் கருத்துக்களுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து வந்ததும் அவர் தன்னை மட்டுமே கட்சியில் முன்னிறுத்துக்கொள்ள தன்னுடைய வியூக வகுப்பு நிறுவனம் மூலம் முயற்சித்து வருவதும் அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திருக்கும் நிலையில், அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடமே கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக புகார் பட்டியலை வாசித்துள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதவ் அர்ஜூனா, பொறுமையாக இருந்தது போதும், அதிகாரத்தை பிடிக்கும் நேரம் வந்துவிட்டது என மீண்டும் திமுகவை சீண்டியுள்ளதும் புதியதோர் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
விஜயுடன் மேடையேற மறுத்த திருமா ; அப்செட்டில் ஆதவ் ? இதுதான் காரணமா ?
இப்படி ஆதவ் அர்ஜூனா மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி பேசுவதற்கு காரணம், வரும் டிசம்பர் 6ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா தொகுத்த அம்பேத்கர் குறித்த புத்தக நிகழ்வு வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயையும் ஒன்றாக மேடையில் அமரவைத்து தனது புத்தக வெளியீட்டு விழாவை நடத்த முயற்சித்தார். ஆனால், இந்த முன்னெடுப்பால் திமுக தலைமை அதிருப்தி அடைந்ததால், அந்த விழாவில் பங்கேற்பதை திருமாவளவன் புறக்கணித்துள்ளார். தன்னுடைய கட்சித் தலைவரே தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்க மறுத்தது ஆதவ் அர்ஜூனாவை அப்செட் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து பிரித்து வரும் 2026 தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான அடித்தளமாகவே இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இதற்கு திருமா முட்டுக்கட்டை போட்டுள்ளார். இந்த வருத்தத்தில் இருந்த, ஆதவ் அர்ஜூனா மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீண்டும் திமுகவை சீண்டி பார்த்துள்ளார்.
விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார் – ஈஸ்வரன்
இந்நிலையில், யாரும் எதிர்பாராத சூழலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதவ் அர்ஜூனா குறித்து பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதவ் அர்ஜூனா உடைத்துவிடுவார் என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது..
— Raja Shanmugasundaram (@SRajaJourno) November 25, 2024
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி#AadhavArjuna #VCK #EREswaran pic.twitter.com/hWBczhCoR4
அதில், ஆதவ் அர்ஜூனா எல்லா வசதிகளை படைத்தவராக இருக்கிறார். அவர் அந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஊடுருவியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவர் இரண்டாக உடைத்துவிடுவாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று அந்த பேட்டியில் ஈஸ்வரன் அதிர்ச்சியான கருத்துகளை வெளியிட்டுள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதவ் அர்ஜூனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)