சாலை விரிவாக்கத்தால் குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதா..? - தி.மலை அருகே மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே சாலை விரிவாக்கத்தால் குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதா என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவண்ணாமலை அருகே ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக கூறி மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அவலூர்பேட்டை செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக மரங்கள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அகற்றப்பட வேண்டிய மரங்களில் ஊழியர்கள் மூலம் குறியீடுகள் இடப்பட்டு இருந்தது. இந்த குறியீடுகள் செய்யப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது மங்கலம் பகுதியில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறியீடு இல்லாத மரத்தையும் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் நெடுஞ்சாலை துறை ஊழியர்களிடம் குறியீடு இல்லாத மரங்களை ஏன் வெட்டு கிறங்கள் என கேள்வி எழுப்பினர். அப்போது அதிகாரிகள் கூறியதால் வெட்டுகிறோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குறியீடு செய்யப்பட்டத மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் மங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் காவல்நிலைய துணை ஆய்வாளர் கவிதா மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது அதிகாரிகள் நேரடியாக வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள் மரங்களை நேரில் வந்து எந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து குறியீடு இல்லாத மரங்கள் வெட்டப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை எந்த மரங்களும் வெட்டப்படாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மரங்களை பாதுகாக்க பொதுமக்கள் நடத்திய போராட்டத்தினால் திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலையில் சுமால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதே போன்று திருவண்ணாமலையில் இருந்த தானிப்பாடி செல்லக்கூடிய பகுதிக்கு புதியதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது இதானால் சாலை ஓரங்களில் உள்ள புளிய மரங்களை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.