சாராயம் வியாபாரிகளை பிடிக்க துப்பாக்கியுடன் சென்ற போலீஸ்....ஏமாற்றுத்துடன் திரும்பினர்...!
ஆரணி அருகே அதிக அளவில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் சாராய வியாபாரிகளை கைது செய்ய துப்பாக்கியுடன் சென்ற காவல்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்திமலை பட்டு மலைப்பகுதியில் சாராய வியாபாரிகள் பலர் 100 மீட்டர் நீளமுள்ள கம்பியை அடிவாரப் பகுதி வரை இறக்கி அதன் மூலமாக சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். சாராயம் வாங்க வருபவர்கள் பணத்தை கம்பியில் இணைக்கப்பட்டுள்ள பைக்குள் போட்டு விடுவார்கள். அதன் பிறகு சாராயம் வியாபாரிகளால் அந்த கம்பி மேலே இழுக்கப்பட்டு அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு அந்த பணத்திற்கு உரிய சாராய பாக்கெட்டுகள் கீழே அனுப்பிவிடுவார்கள். இந்த நடைமுறையில் தான் அங்கு சாராய விற்பனை நடைபெற்று வந்தது. இந்த சாராயம் விற்பனை குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின, உடனடியாக காவல்துறையினர் அந்த மலையில் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு இருந்த சாராய வியாபாரிகள் தப்பித்து சென்றுவிட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் அங்கு சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதேபோன்று பூசிமலை பகுதியிலும் அதே நடைமுறையில் சாராய வியாபாரிகள் சாராயம் விற்பனை செய்தனர். இந்த கும்பலை பிடிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நாட்களாக யாரவது மலை மீது ஏறினாலோ அங்கு துப்பாக்கியுடன் இருக்கும் சாராய வியாபாரிகள் மேலே வருபவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தப்பித்து விடுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் காவல்துறையினர் அங்கு சாராய விற்பனையாளர்களை பிடிப்பதற்கோ அங்கு யாரும் செல்வதில்லை, இதன் காரணமாக மலைப்பகுதியில் சாராய வியாபாரிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மலை மீது சாராயம் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தாலுக்கா ஆய்வாளர் புகழ் ஆகியோரின் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நேற்று காலையில் அதிரடியாக பூச்சி மலைக்குப்பம் பகுதிக்கு சென்றனர். பின்னர் மலை உச்சிக்கு சென்ற காவல் துறையினர் அங்கு சாராயம் விற்க பயன்படுத்திய நீல கம்பி மற்றும் பாறை இடுக்குகளில் பதுக்கி வைத்திருந்த சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் டியூப்பில் இருந்த 300 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் விற்கும் கும்பலை பிடிக்க முயன்றதால் ஆனால் அங்கு காவல்துறையினர் வருவதை அறிந்ததும் அங்கிருந்து மூன்று நபர்கள் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். இதனால் துப்பாக்கிகளுடன் சென்று பெரிய அளவில் சோதனை நடத்தி சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்காமல் என எண்ணிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. அதே நேரம் காவல்துறையினர் சோதனைக்கு செல்லும் தகவலை முன்கூட்டியே சாராய வியாபாரிகளுக்கு தகவல் கொடுத்தது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.