Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்
திருவண்ணாமலை புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் மேற்கொண்ட விவசாய சங்க கிராம மக்களை பேரிக்காடுகள் அமைத்து தடுத்த போலீசார்.
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மலைகள், காடுகளை அழித்து குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் புனல் காடு கிராம மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புனல்காடு கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் டெல்லி பாபு உள்ளிட்டோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட புனல்காடு கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயற்சித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், அண்ணா நுழைவாயில் அருகில் குவிக்கப்பட்டு பேரிகாடுகள் அமைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற போது காவல்துறைக்கும் விவசாய சங்கத்திற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காவல்துறையினர் தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நடை பயணம் மேற்கொண்டனர்
ஆனால் போராட்ட களத்தில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பேரிக்காடுகள் அமைத்து அவர்களை கீழே தள்ளி காவல்துறை அண்ணா நுழைவாயில் அருகிலேயே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் அமர வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் போலீஸ் வாகனம் மற்றும் ரோடு போடும் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு ரோட்டின் குறுக்கே நிறுத்தி வைத்து பொதுமக்கள் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினர். சிறிது நேரம் அங்கேயே இருந்த பொதுமக்கள் மீண்டும் நடை பயணத்தை தொடங்கி காவல்துறை கட்டுப்பாட்டையும் மீறி செல்ல முயற்சித்தனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்,ஆண்கள் என அனைவருக்கும் காவல்துறை இருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு சிலரை குண்டு கட்டாக காவல்துறையினர் போலீஸ் வாகனத்தில் கைது செய்வதற்காக வாகனத்தில் ஏற்றினர்.
அப்பொழுது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளால் 5க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்து காயம் அடைந்து ஆட்டோக்கள் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் காவல்துறை பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அளுவளாகத்திற்கு உள்ளே செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பூட்டப்பட்டு பேரிகாடுகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று தரையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தும், புடவைகளை அவிழ்த்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் ஆட்சியர் அலுவலக கதவினை மூடினர். பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.