திருவண்ணாமலை: குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும், நகரின் மையப் பகுதியில், கிரிவலப்பாதையில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் ஊராட்சிக்குட்பட்ட புனல்காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதியதாக குப்பை கிடங்கு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடி வாரத்தில் காட்டுப் பகுதியாக இருந்த மரங்கள் அனைத்தையும் ஜேசிபி இயந்திரம் மூலம் மாவட்ட நிர்வாகம் அகற்றி அந்த இடத்தில் குப்பைகளை கொட்டி குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனல்காடு கிராம மக்கள் மற்றும் தேவனந்தல் கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இறுதியாக குப்பை கிடங்கு அமைக்க உள்ள இடத்தில் தென்னை மரம், கொய்யா மரம், பாதாம் மரம், நெல்லி மரம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை புனல் காட்டு மக்கள் நட்டு வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை காவல்துறையினரின் உதவியுடன் வருவாய் துறையினர் புனல் காட்டு பகுதியில் பொது மக்கள் நட்டு வைத்த மரக்கன்றுகள் அனைத்தையும் பிடுங்கி ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சமன் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனல் காட்டு பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் கிராம மக்களில் ஆறு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், ஆதலால் தங்களது கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டாம் என நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்ததால் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், மேலும் தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட புனல்காடு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்தும், புரண்டும், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.