’டிடிவி தினகரன் மகளுக்கு நாளை மறுநாள் திருமணம்’- திருவண்ணாமலையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்...!
’’சசிகலா விடுதலை தாமதம், துளசி வாண்டையார் மறைவு ஆகிய காரணங்களால் ஜெயஹரிணி-ராமநாதன் திருமணம் தள்ளி போனது’’
அமமுக கட்சியின் பொதுச்செயளாலர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும், பூண்டி துளசி வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் திருமணம் நடைபெற உள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன்- அனுராதாவின் மகள் ஜெயஹரணிக்கு காதணி விழா நிகழ்ச்சி ஜெயலலிதா தலைமையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜெயஹரணியின் திருமணத்தையும் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோயிலிலேயே நடத்திட முடிவு செய்யப்பட்டது. 2021 தை மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாவது தள்ளி போனது, அதன்பிறகு மணமகன் ராமநாதனின் தாத்தா துளசி வாண்டையார் மறைவினால் இரண்டாவது முறையாக திருமணம் தள்ளி போனது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் நாளை அபர்ணா ஹோட்டலில் இருந்து ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை மாப்பிள்ளை அழைப்பு நடைபெறுகிறது. மறுநாள் காலை 8.30 மணிக்கு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிக்காக வழி நெடுகிலும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக டிடிவி தினகரன் நேற்று முன் தினம் இரவே திருவண்ணாமலை அபர்ணா ஹோட்டலுக்கு வந்துவிட்டார்.
நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி கொண்டு வருகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுக்காக அழைப்பிதழ் ஒன்றை மாவட்ட கழக செயலாளரிடம் டிடிவி தினகரன் வழங்கியுள்ளார். திருமணத்திற்காக வருகை தரும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் தங்குவதற்கு திருவண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அனைத்து உயர்ரக விடுதிகளும் புக் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளின் அனைத்து முன்புறம் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் இரண்டு நாட்களும் உணவருந்து வகையில் ஒரே நேரத்தில் 1500 பேர் வரை சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகள் திருமணத்தையொட்டி டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு, அரசியல் இயக்கம் என்பதைத் தாண்டி, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் என்ற பந்தத்தில், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், என்ற பாசப்பிணைப்பு நமக்குள் எப்போதும் இருக்கிறது. என் மீது நீங்கள் காட்டுகிற அளவிடமுடியாத அன்பும், உங்கள் மீது எனக்குள்ள அசைக்க முடியாத பற்றுமே அதற்கான சாட்சி.
அத்தகைய கழகம் என்னும் நம்முடைய அன்புக்குடும்பத்தின் மகிழ்ச்சி விழாவாக, என் அன்பு மகள் ஜெயஹரிணி அவர்களுக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் திருநிறைச்செல்வன்.மு. ராமநாத துளசி வாண்டையார் அவர்களுக்கும் வருகிற 16.09.2021 வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. தாங்கள் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து திருமணத்தை நடத்திட வேண்டும் என்பதே எனது பெரும் விருப்பம்.
எனினும் கொரோனா பேரிடர் பாதிப்பு இன்னும் முழுமையாக விலகாத நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால், தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இல்லறம் ஏற்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட தங்களின் மனப்பூர்வமான அன்பையும், இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன். இறையருளால் கொரோனா சுழல் மாறியவுடன் நல்விருந்து ஒன்றில் நாம் அனைவரும் சந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.