மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரைவில் ஒரு கோடி இலக்கை எட்ட உள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை அரசு கட்டிடங்கள் திறப்பு விழா கலைஞரின் வரும் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் புற நோயாளிகள் கட்டிடம், தோக்கவாடி, பரமனந்தல் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலைய கட்டிடம், அடி அண்ணாமலை, தச்சூர் ஆகிய கிராமத்தில் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு உள்ளிட்டவைகளை திறந்து வைத்தும் பல்வேறு துறைகளின் சார்பில் 2120 பயனாளிகளுக்கு 11 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிக்கு வழங்கினார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த தீபத் திருவிழாவில் 12 மணி நேரத்தில் 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து எந்த விதமான அசம்பாவிதம் நடைபெறாததால் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த விழாவை சிறப்பாக நடத்த அமைச்சர் எ.வா.வேலு பல்வேறு கூட்டங்களை நடத்தியதால் தான் இவ்வாறு சிறப்பாக நடத்த முடிந்தது. தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 70 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும், 10 ஆயிரம் நபர்களுக்கு ஆபரேஷன் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு பல்வேறு ஒன்றிய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. அனைவருக்கும் மருத்துவ சேவை என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது. அதிக மருத்துவ மாணவர்களை உருவாக்குவது கட்டமைப்பு வசதிகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 71 மருத்துவக் கல்லூரிகளில் அரசு சார்பில் 36 தனியார் 34 இசிஎஸ் 1மருத்துவக் கல்லூரி என தமிழகத்தில் 71 மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
அதே போல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் இன்னு உயிர் காப்போம் நம்மைக் காப்போம் 48 மணி நேரம் உள்ளிட்ட திட்டங்களும் தமிழகத்தின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் 208 இடங்களில் நகர்ப்புற நல வாழ்வு மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருதய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் நல மையமும் அமையப்பட உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் 13 லட்சம் செலவில் புதிதாக டயாலிஸ் ரத்த சுத்திகரிப்பு கருவிகள் நிறுவப்பட உள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 78 சதவீதம் சர்க்கரை வியாதி, பிசியோதெரபி 15 லட்சத்து 63 ஆயிரத்து 332 மருந்து பெட்டகம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 99 கோடியே 99 லட்சத்தில் 964 நபர்களுக்கு நேரடியாக சென்று அவர் ஒரு வீடுகளில் பரிசோதனை செய்து மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒரு கோடி ஆவது பயனாளிக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்கும் விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.