ராணிப்பேட்டை: மார்பளவு நீரில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு பயணம் - மேம்பாலம் அமைக்க கோரிக்கை
'’20 நாட்களாக கிராமத்திலேயே முடங்கிக் கிடக்கின்றோம், அடுத்து பெய்யவிருக்கும் பெருமழை காலங்களில் நந்திமங்கலம் கிராமத்தின் நிலைமை இன்னும் மோசமாக கூடும்’’
![ராணிப்பேட்டை: மார்பளவு நீரில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு பயணம் - மேம்பாலம் அமைக்க கோரிக்கை School students and villagers risks lives by crossing flooded river stream near Ranipet ராணிப்பேட்டை: மார்பளவு நீரில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு பயணம் - மேம்பாலம் அமைக்க கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/09/d36f7ff6e41000ae8962ad9d18a96986_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே நந்திமங்கலம் என்னும் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நந்திமங்கலம் கிராமத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நந்திமங்கலத்திலிருந்து கட்டாரிக்குப்பம் வழியாக மிதிவண்டிகள் மற்றும் கால்நடையாகச் சென்று கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பொன்னை ஆற்றில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது இதனிடையில் பொன்னை ஆற்றிலிருந்து திறக்கப்படும் உபரிநீரால் நந்திமங்கலத்திலிருந்து கட்டாரிக்குப்பம் செல்லும் வழியில் உள்ள இரண்டு ஓடைகளிலும் கடந்த இரண்டு வார காலமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகளுக்கும் மற்றும் விவசாய பொதுமக்களும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இந்த இரண்டு ஓடைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தின் போது இந்த ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மழைக் காலங்களில் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் இந்த இரண்டு உடைகளையும் கடந்து செல்கின்றனர். இதேபோல் விவசாயிகளும் மார்பளவு நீரில் ஓடையை கடந்து செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் இந்த ஓடைகளின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என்ற குற்றச்சாட்டு நந்திமங்கலம் கிராம மக்களால் முன்வைக்கப்படுகின்றது .
இதுகுறித்து நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி ABP நாடு செய்தி குழுமத்திடம் தெரிவிக்கும்போது " ஆந்திராவில் பெய்த கனமழையின் காரணமாகப் பொன்னை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் படுகின்றது. அதன்படி பெருங்காஞ்சி ஏரி நிரம்பி அங்கிருந்து வெளியேறிய உபரிநீரால் நந்திமங்கலம் ஏரி கடந்த சில தினங்களுக்கு முன் நிரம்பியது. இங்கிருந்து வெளியேறும் உபரிநீர் நந்திமங்கலம் ஓடைகள் வழியாக போளிப்பாக்கம் ஏரிக்குச் செல்கிறது. ஓடையில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கொடைக்கல் அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகத்தைத் தலையில் சுமந்தபடி இடுப்பளவு நீரில் பெரும் சிரமத்துடன் 2 ஓடைகளையும் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் நந்திமங்கலம் கிராம விவசாயிகளும், தினகூலி வேலை தேடி வெளியூர் செல்பவர்களும், ஊரை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக நந்திமங்கலம் கிராமத்தில் பாலம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் விஜயகுமார் கிராம மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் ABP நாடு செய்தி குழுமத்திடம் நரசிம்மன் என்ற கட்டிடத் தொழிலாளி பேசும் போது, ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் கடந்த 20 நாட்களாகக் கிராமத்திலேயே முடங்கிக் கிடக்கின்றோம் . தற்போதுதான் மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து பெய்யவிருக்கும் பெருமழை காலங்களில் நந்திமங்கலம் கிராமத்தின் நிலைமை இன்னும் மோசமாக கூடும் என கிராம மக்கள் அச்சப்படுவதால் உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணியைத் துவங்க வேண்டும் என நரசிம்மன் கூறினார்.
ஓடையில் பெருகி ஓடும் வெள்ளநீரால் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நந்திமங்கலம் கிராம மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி கிராம மக்களின் கோரிக்கையான மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)