திருவண்ணாமலை மலை உச்சியில் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த ரஷ்ய வாலிபரால் பரபரப்பு
அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த ரஷ்ய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். கோவிலின் பின்புரம் சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையாகும், இந்த மலையின் உச்சியில் வருடத்திற்கு ஒருமுறை கார்த்திகை மாதத்தில் மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் அண்ணாமலையார் மலையின் மீது ஏறவும் மற்றும் படம் பிடிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மலையின் மீது கந்தாஸரமம் அருகே ட்ரோன் கேமரா மூலம் வெளிநாட்டினர் ஒருவர் படம் பிடித்து கொண்டிருப்பதாக வனத்துறைக்கு இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர், கந்தாஸரமம் அருகே விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு வெளிநாட்டை சேர்ந்த 3 நபர்கள், அண்ணாமலையார் மலையின் உச்சியில் ஆளில்லா விமானம் ( drone camera) மூலமாக படம் பிடித்துள்ளார். வனத்துறையினர் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த செர்ஜி கோலோஷேகே வயது (34) என்பவர், தனது ஆளில்லா விமானம் மூலமாக படம் பிடித்ததாகவும், மற்ற 2 நபர் வேடிக்கை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் 2 நபர்களை அங்கேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, ஆளில்லா விமானத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து செர்ஜியிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார். அப்போது அவர், திருவண்ணாமலைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வந்ததாகவும், மலையின் இயற்கை அழகை படம் பிடித்ததாகவும், படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரியாது என்றும், படம் பிடித்த காட்சிகளை அழித்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வனத்துறையினர், ஆளில்லா விமானத்தில் பிடிக்கப்பட்ட படக் காட்சிகள் , செல்போன், 360 டிகிரி படம் பிடிக்கக்கூடிய ஓஷ்மோ கேமரா மற்றும் படம் பிடிக்க வைத்திருந்த பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் படம் பிடிக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் வனத்துறையினர் அழித்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட், விசா ஆகியவற்றின் நகல்களை பெற்றுள்ளனர் . பின்னர், அவரிடம் ஆளில்லா விமானத்தை ஒப்படைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். அண்ணாமலையார் கோவிலில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ட்ரோன் கேமரா மூலம் வெளிநாட்டவர் படம் பிடித்த சம்பவத்தினால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
மாதம் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகையோடு எழுத்தாளர் ஆகலாம்; விண்ணப்பிக்க ஜன.15 கடைசி..