எழுத்தார்வம் கொண்ட 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மாதம் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகையோடு எழுத்தாளர் ஆகலாம். இதற்கென உள்ள மத்திய அரசின் யுவா திட்டத்துக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும் யுவா திட்டம் தொடங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கையின்படி, இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டத்தை (யுவா), மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்தது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை , விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதமர் இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ், அகில இந்தியப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 30 வயதுக்குக் குறைவான இளம் எழுத்தாளர்கள் கதை, கட்டுரை, கவிதை, நாடகம், பயணக் குறிப்புகள் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுதலாம்.
நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) யுவா- 2.0 திட்டம் ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது. உதவித்தொகையுடன் கூடிய இந்த வழிகாட்டுதல் திட்டத்துக்கு, 30 வயதுக்கு குறைந்த 75 இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் இளம் எழுத்தாளர்கள் தேசிய புத்தக அறக்கட்டளை மூலம் ஆறு மாத கால வழிகாட்டுதல் பயிற்சி பெறுவார்கள்.ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ.50,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். தேசியப் புத்தக அறக்கட்டளை மூலம் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மற்றும் பிரதித் திருத்த ஆதரவு வழங்கப்படும். எழுத்தாளர்களின் நூல்கள் பின்னர் மற்ற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும். மேலும் சிறந்த, வெற்றிகரமான பிரசுரங்களுக்கு 10 சதவீத ராயல்டி தொகையும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை என்ன?
யுவா 2.0 திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட்டது. 2023 ஜனவரி 15ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 16 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மதிப்பீடு செய்யப்பட உள்ளது. தேசிய அளவிலான நடுவர் சந்திப்பு ஏப்ரல் மாதத்திலும் யுவா திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் குறித்த அறிவிப்பு மே மாதத்திலும் வெளியாக உள்ளது.
ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை 6 மாத காலம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 2024 பிப்ரவரி 1 அன்று புத்தகம் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பம் உள்ளவர்கள் mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இளம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த ‘யுவா’ திட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் போட்டிக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை https://www.ugc.ac.in/pdfnews/4523762_PM_YuvaMentorshipScheme-1.pdf என்ற வலை தளத்தில் அறியலாம்.