watch video: மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் - அனைவரது கவனத்தையும் ஈர்த்த மணமக்கள்
திருவண்ணாமலை அருகே 10 வருடங்கள் காதலித்து மூன்று வருடங்களாக சிந்தித்து மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழை தயார் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த மணமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன் இவர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பலராமன், இவருடைய தாயார் கோவிந்தம்மாள். எழிலரசனின் தந்தை பல வருடங்களாக வேட்டவலம் கிராமத்திலேயே அன்பு மெடிக்கல் என்ற பெயரில் மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். எழிலரசன் கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள வசந்தா என்பவரை காதலித்து வந்துள்ளார். வசந்தா தனியார் செவிலியர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் என்ற செப்டம்பர் 5-ஆம் தேதி வேட்டவலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பெற்றோர்களுடைய அனுமதியோடு திருமணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மணமக்கள் அனைவரது இல்லத்திற்கும் கொடுக்கக்கூடிய திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை வடிவில் அனைவரையும் கவரும் வகையில் அச்சடித்து கொடுத்து வருகின்றனர். மாத்திரை வடிவில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வரைலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலை அருகே 10 வருடங்கள் காதலித்து மூன்று வருடங்களாக சிந்தித்து மாத்திரை அட்டை வடிவில் தனது திருமண அழைப்பிதழை தயார் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்த மணமக்கள் இந்த அழைப்பிதழ் @abpnadu @SRajaJourno pic.twitter.com/NFewVfCWnY
— Vinoth (@Vinoth05503970) August 20, 2022
இது குறித்து மணமகன் எழிலரசி பேசுகையில்;
“நானும் எனது வருங்கால மனைவியுமான வசந்தாவிடமும் வித்தியாசமான அழைப்பிதழை அனைவருக்கும் வழங்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்து இருந்தோம். குறிப்பாக இந்த திருமண அழைப்பிதழ் மாத்திரை வடிவில் வர வேண்டும் என எண்ணி பல மணி நேரங்களாக , தயார் செய்தோம். அதிலும் குறிப்பாக மனிதனுக்கு அவ்வப்போது வரக்கூடிய உபாதைகளை தீர்க்கும் வகையில் ஒரு மாத்திரையை தேர்வு செய்ய வேண்டும் என எண்ணி அதற்காக அசிக்லோபெனாக் (ACECLOFENAC) என்ற மாத்திரையை அசிக்லோபெனாக் வடிவ மாத்திரை போன்று கடைசியாக தேர்வு செய்தோம். பின்னர் மாத்திரை வடிவில் பின்புறம் உள்ள அட்டவணையில் அச்சடிக்கப்பட்ட வேண்டும் என கருதி பல நாள் காத்திருந்து அழைப்பிதழை தற்பொழுதான் நாங்கள் தயார் செய்து அனைவரிடத்திலும் கொடுத்து வருகிறோம்” என்றார்.
மேலும், தாங்கள் அளித்த மாத்திரை வடிவலான திருமண அழைப்பிதழ் அட்டை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தங்களது திருமண அழைப்பிதழ் பரவியுள்ளது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். தங்களுடைய உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிடத்திலும் இந்த திருமண அழைப்பிதழ் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். குறிப்பாக அசிக்லோ பெனாக் பாராசிட்டமல் மாத்திரை எவ்வாறு ஜுரம் வலி போன்ற நிவாரணிகளை குணப்படுத்துகிறதோ அது போன்று வாழ்க்கையில் அனைத்து இன்ப துன்பங்களையும், லாப நஷ்டங்களையும், நன்மை தீமைகளையும் உணர்ந்து விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது போன்ற திருமண அழைப்பிதழ் அட்டையை நாங்கள் தயாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.