திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷை கண்டு பிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், போளூர், ஜமுனாமரத்தூர், சேத்துப்பட்டு, செய்யார், ஆரணி, வந்தவாசி, வெம்பாக்கம் உள்ளிட்ட 12 தாலுகாக்களிலும் இருந்து விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் முன்னிலையில் பேசினர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வரவேண்டும், நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும், அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோஷம்
அப்போது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை புரியாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கூட்ட அரங்கில் காத்திருந்து பின்னர் ஆட்சியரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் காணவில்லை காணவில்லை மாவட்ட ஆட்சியரை காணவில்லை, கண்டுபிடி கண்டுபிடி காவல்துறையை கண்டுபிடி, வரச்சொல் வரச்சொல் மாவட்ட ஆட்சியரை வரச்சொல், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் மாவட்ட ஆட்சியரை கண்டிக்கிறோம், மதிக்கவில்லை மதிக்கவில்லை விவசாயிகளை மதிக்கவில்லை, விவசாயிகளை மதிக்காத மாவட்ட ஆட்சியரே, நடத்த வேண்டும் நடத்த வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
விவசாயிகள் கோரிக்கை
கண்ணமங்கலம் பகுதியில் நீர் நிலை பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகள் உள்ளது. அதனை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு அளித்துள்ளோம் ஆனால் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நீர் நிலை பகுதிகளில் பட்ட வழங்கிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் உத்தரவு விட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்து வருகிறது. அனைத்து ஆவின் பாலிற்கும் ஒரே விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. பாலின் தரத்திற்கு ஏற்றவாரு பாலின் விலை ஆவின் நிர்வாகம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த அளவுக்கு ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்பதனை முன்கூட்டியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும், புதுப்பாளையம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக முறையான ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்த பிறகும் முறைகேடு நடத்தியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என விவசாயி குற்றம் சாடினார்