மேகதாதுவில் அணையா?: தற்கொலை செய்து கொள்வேன் என அய்யாக்கண்ணு மிரட்டல்...!
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால் டெல்லிக்கு சென்று தென்னிந்திய நதிகள் விவசாய சங்கத்தினர் தற்கொலை செய்து கொள்வோம் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் வேளாண்மைத்துறைக்கு நிதி நிலை அறிக்கை அளித்து இல்லை. தமிழகத்தில் முதன்முறையாக திமுக அரசு வேளாண்மைத் துறைக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் 6 கி.மீ. தொலைவுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான அறிவிப்புக்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறும் என நம்புகிறோம். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 2,500 தருகிறோம் என்றும் மோடி அரசாங்கம் ஒரு குவிண்டாலுக்கு 5000 ரூபாய் தருகிறோம் என்று உறுதியளித்தனர். மத்திய அரசுதான் இதற்கான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உள்ளது. 5500 ரூபாய் தருவதாக கூறி வெறும் 1400 ரூபாய் மட்டுமே தருகின்றது. மோடி அரசாங்கம் ஆனால் தற்போது ஸ்டாலினுடைய புதிய அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்படும் என நம்பிக்கையில் உள்ளோம்.
விவசாயிகளை காப்பாற்ற, ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த அறிவிப்பும் இடம் பெற செய்ய வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை வழங்கக்கூடாது. இதனால் ஆண் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக அரசாங்கம் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இப்போது பிரச்சாரம் செய்வதில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படாது என்ற அறிவிப்பும் இடம் பெற வேண்டும்
கர்நாடகாவில் மேகேதாது அணை கட்டிவிட்டால், டெல்டா சாகுபடி மற்றிலுமாக அழிந்துவிடும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற அடைமொழி போய்விடும். டெல்டா மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அனைத்து திசைகளையும் வளமான பூமியாக மாற்ற வேண்டும்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையை கட்டினாலும் தமிழகத்தை கேட்காமல் அணை கட்டக் கூடாது எனவும் கூறியுள்ளது, அதையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டினால் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் டெல்லியில் சென்று தற்கொலை போராட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்த விலையை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்காத தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதாவரி – காவிரி நதிகளை இணைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கோதாவரியில் 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர், கடலில் வீணாக கலக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 300 டிஎம்சி தண்ணீர், காவிரிக்கு கிடைக்கும். கர்நாடக மாநிலத்துக்கு 200 டிஎம்சி தண்ணீர் தேவை என கூறகிறார்கள். அவர்களின் தேவைக்கு போக மீதமுள்ள 100 டிஎம்சி கிடைத்தால் பாலாறு, தென்பெண்ணையாறுக்கு நீர் வரத்து அதிகரித்து வளமான பகுதியாக மாறும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.