Vinayagar Chaturthi 2024: விநாயகர் சிலை ஊர்வலத்தில் பிரச்சனைகளில் ஈடுபட்டால்... - எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தின் போது பதட்டமாக இருக்கக்கூடிய பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் விநாயகர் சிலைகள் பல இடங்களில் காவல்துறை அனுமதி பெற்று வைக்கப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் பூஜை நடைபெறும். அதன் பின்பு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
திருச்சியில் ஆண்டுதோறும் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் போது குறிப்பிட்ட சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் பதட்டமான இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் முழு வீச்சியில் பணியாற்ற வேண்டுமென திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி வருண்குமார் தலைமையில் போலீசார் அணிவகுப்பு..
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பதற்றமாக விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலங்கள் செல்லும் இடங்களான துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் பொருட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் காவல்துறை அணிவகுப்பு நடத்தப்பட்டது.
குறிப்பாக புத்தாநத்தம் காவல் நிலைய பகுதிகளில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பில் 2- கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 2-துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 5-காவல் ஆய்வாளர்கள், 169-காவலர்கள் மற்றும் 118- ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 296 பேர் இதில் கலந்து கொண்ட அணி வகுப்பு நடைபெற்றது.
புத்தாநத்தம் தெற்கு தெரு காளியம்மன் கோவில் திடலில் இருந்து புறப்பட்டு புத்தாநத்தம் கடைவீதி, ஜீம்மா பள்ளிவாசல் வழியாக இடையப்பட்டி விநாயகர் கோவில் குளம் (சிலை கரைக்கப்படும் இடம்) வரை சென்று முடிக்கப்பட்டது.
அதேபோல் துவரங்குறிச்சி காவல் நிலைய பகுதிகளில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பில் 2- கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 2-துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 5-காவல் ஆய்வாளர்கள், 169-காவலர்கள் மற்றும் 118- ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 296 பேர் இதில் கலந்து கொண்ட அணிவகுப்பானது துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து இருந்து புறப்பட்டு துவரங்குறிச்சி பள்ளிவாசல் தெரு, காமன் கோவில் தெரு வழியாக பூதநாயகி அம்மன் கோவில் குளம் (சிலை கரைக்கப்படும் இடம்) வரை சென்று முடிக்கப்பட்டது.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பிரச்சனையில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக்கை.
மேலும், துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அவ்விடங்களை சென்று மேற்பார்வையிட்டார்.
அப்பகுதியில் குறிப்பாக விநாயகர் ஊர்வலத்தின் போது பிரச்சனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில், காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 3-கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 10- துணை காவல் கண்காணிப்பாளர்கள், 24- காவல் ஆய்வாளர்கள், 69-உதவி ஆய்வாளர்கள், 260-சட்டம் (ம) ஒழுங்கு காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை என மொத்தம்-605 காவல்துறையினர்கள் மற்றும் 150-ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக புகார்கள் ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருப்பின் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.