(Source: ECI/ABP News/ABP Majha)
ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைகின்ற மோசடி கும்பலிடம் நாடு சிக்கிக்கொண்டது - திருமாவளவன்
பாஜகவால் அரசியலமைப்பு சட்டத்திற்கு பேராபத்து வந்துள்ளது. அவர்களிடமிருந்து அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற இந்திய கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் - திருச்சியில் திருமாவளவன் பேச்சு..
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் நிறைவாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றினார் அதில், ”இந்த மாநாட்டை வெற்றிபெற வைத்த அனைவருக்கும் கண்ணீர் துளிகளால் நன்றி தெரிவிக்கிறேன். மாநாடு வெற்றிபெற்று விட்டது. மாபெரும் வெற்றி. இந்த மாநாடு ஆர்.எஸ்.எஸ் சங்பரிவர், சனாதன சக்திகளுக்கு , எதிரான மாநாடு. பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்கின்ற மாநாடு. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் விழா நாயகன் அரசியலமைப்பு சட்டம் தான். மாநாட்டு மேடையில் தலைவர்கள் ஏந்திய சுடர் ஜனநாயக சுடர். கூட்டணி கட்சியினர் உடன் கைகோர்த்து நிற்காமல் சுடர் ஏந்தி நிற்கிறோம். நாடு சனாதன இருள் சூழ்ந்து நிற்கிறது மோடி அமித்ஷா கும்பல் மக்களை ஏமாற்றும் கும்பலாக இருக்கிறார்கள்.ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைகின்ற மோசடி கும்பலிடம் நாடு சிக்கிக்கொண்டது. 10 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு மக்களுக்கு எந்தவிதமான திட்டங்களையும் அவர்கள் செயல்படுத்தவில்லை.
உலக மகா நடிகர் மக்களை ஏமாற்றி வருகிறார் பத்தாண்டுகளில் இத்தனை சாதனைகள் செய்தோம் என அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மோடி அமித்ஷாவின் சேவை அம்பானிக்கும் அதானிக்குமான சேவையாக தான் உள்ளது. அதுதான் பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனையாக உள்ளது. ஏழை மக்கள் வாங்கும் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அம்பானி அதானி கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். அதானி ஏர்போர்ட், அதானி துறைமுகம் என எல்லாமே அதானிக்கும் அம்பனிக்கும் தான்.
இங்கு இருக்கும் நாம் இந்துக்கள் அல்ல... புத்தரின் வாரிசுகள். சூத்திர இந்துக்களுக்கு கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொடுக்காமல் அவர்களை திசை திருப்ப ராமர்கோவிலை கட்டி முடிப்பதற்குள் திறக்கிறார்கள். ஜெய் ஸ்ரீ ராம் என சொல் என சொல்கிறார்கள்.இந்த மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். இதில் இந்திய பிரச்சனைகள் அனைத்தும் உள்ளது. அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பதுதான் விடுதலை சிறுத்தைகள் பேரியக்கம். கார்ப்பரேட் மயம் ,சனாதன மயம், இதுதான் பாஜகவின் கொள்கையாக இருக்கிறது. அதன் மூலம் சமூக நீதிக்கு குழி தோண்டுகிறார்கள்.எங்க அப்பாவின் பெயரும் ராமசாமி தான். தந்தை பெரியாரின் பெயரும் ராமசாமி தான், எங்களுக்கும் ராமர் உண்டு, அவர்தான் பெரியார். எங்களிடமும் ராமர் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளார் அவர் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதை போல் செயல்படாதீர்கள் நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை மாறாக நாங்கள் ராமரை எதிர்க்கவில்லை மாறாக ராம பெயரால் நடக்கும் அரசியலை தான் எதிர்க்கிறோம். ராம ராஜ்யம் என்றால் அது பார்ப்பன ராஜ்ஜியம் என்று தான் பொருள்.
புராணம் என்பது வேறு வரலாறு என்பது வேறு இவர்கள் வரலாற்றை திரிக்கிறார்கள். சுதந்திரத்திற்கு காரணம் காந்தி அல்ல நேதாஜி என ஆளுநர் ஆர் என் ரவி கூறுகிறார். காந்தியை தேசத்தந்தை எனக் கூறக்கூடாது சுபாஷ் சந்திர போஸை தான் தேசத்தந்தை எனக் கூற வேண்டும் என்கிறார். ஆனால் சுபாஷ் சந்திரபோஸ்தான் காந்தியை நாட்டில் தேசத் தந்தை என முதன் முதலாக கூறினார்.ஆர்.எஸ்.எஸ் என்பது பிராமணர்களுக்கானது தான் ஜெய் ஸ்ரீராம் என்றால் ராமருக்கே வெற்றி என பொருள் அல்லாஹு அக்பர் என்றால் .. எல்லாரையும் விட இறைவன் தான் பெரியவன் என்று அர்த்தம்.
நாம் ஜெய் டெமோகிரசி என கூறுவோம் அது தான் சரியாக இருக்கும். ராமர் இடத்தில் கீழே விழுந்து மோடி மன்னிப்பு கேட்டார். நான் அரசியல் செய்கிறேன். கோவிலைவைத்து அரசியல் செய்கிறேன் என்னை மன்னித்து விடு என அவர் மைண்ட் வாய்ஸில் பேசியது எனக்கு கேட்டது. கார்ப்பரேட் மயமாதல் பொருளாதார தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது சனாதனமயம் கலாச்சார தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியல் தளத்தில் இவை இரண்டும் சேர்ந்து பாசிசமாக வளர்ந்துள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே ஆட்சி எனது கூறுவது தான் பாசிசம் இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் பன்மைதுவத்திற்கு எதிரானது.
அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிய மோடி கும்பல் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அவர்களால் நாட்டுக்கு பேராபத்து. அம்பேத்கார் கொண்டுவந்த அரசியலைப்பு க்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சங்பரிவார்களின் முதல் எதிரி முதன்மையான எதிரி அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டம்தான். அம்பேத்கார் எழுதிய சட்டத்தை தூக்கி எறிய போகிறார்கள். நாம் அதனை பாதுகாக்க வேண்டும். பிஜேபியை விரட்ட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும். கலைஞர், ஜெயலலிதா இல்லை என்பதால் ஒரு கத்துக்குட்டி ஆட்டுக்குட்டியை அனுப்பி உள்ளனர். வாலை சுருட்டி வைத்து கொள்ளுங்கள்.
சனாதன கும்பல் நினைக்கும் களம் அல்ல தமிழ்நாடு. இது சமூக நீதிக் காண மண்.வட இந்தியர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறி ஏமாற்ற முடியும். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தலைவர்கள் குறித்து பேச முடியாது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜாதியின் ஓட்டை பெறுவதற்காக அந்த சமூகத்தின் தலைவர்களை சேர்ந்தவர்களை கொண்டாடுகிறார்கள். மோடி திருக்குறளை படிக்க தெரியாமல் படிகிறது. கேவலமாக இருக்கிறது. அவர்களின் ஏமாற்று வேலைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை” என்றார்