Crime: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சி கோட்டை கீழதேவதானத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 25). இவர் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர்.
25 ஆண்டுகள் சிறைத்தண்டனை:
இதைத்தொடர்ந்து கடந்த 23.7.2020 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து ஏக காலத்தில் தண்டனையை செல்வமணி அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா பாராட்டினார்.
கவனம் தேவை:
மேலும் இதுக்குறித்து காவல்துறை தரப்பில் கூறியது, திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் குழந்தைகள், பெண்கள் என அனைவருக்கும் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கபட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
குறிப்பாக காவல்துறைக்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும். பெண் குழந்தைகளின் மீது மிகுந்த கவனம் தேவை, அவர்கள் என்ன செய்கிறார்கள், நடவடிக்கை எவ்வாறு உள்ளது, என கண்காணிக்க வேண்டும் என்றனர். குழந்தைகள், பெண்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்