மேலும் அறிய
Advertisement
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் 2 மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர்குலாம் என்ற வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, வேதம் பயின்று வருகின்றனர். இந்த பாடசாலையை ஆடிட்டர் பத்ரிநாராயணன் பட்டர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இந்த வேதபாடசாலையில் பயின்று வரும் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஸ்ரீதரனின் மகன் விஷ்ணுபிரசாத் (வயது 13), சம்பத் மகன் ஹரிபிரசாத் (14), ஈரோடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சேஷாத்திரி மகன் சூர்ய அபிராம் (13) ஆகிய 4 மாணவர்கள், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால், திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் கோபாலகிருஷ்ணன் ஆழமான பகுதியில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்தார். இதைக்கண்ட அந்த பகுதியினர் அவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே மற்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்ட கோபாலகிருஷ்ணன் உடனடியாக வேதபாடசாலைக்கு சென்று தகவல் தெரிவித்தார். இது குறித்து வேதபாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 25 பேர் ஆற்றில் இறங்கி, 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகு மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடினர். இதில் சிறிதுநேரத்தில் விஷ்ணுபிரசாத் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை தேடியும் 2 மாணவர்களும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் மாணவர்களை தேடும் பணிக்காக கலெக்டர் உத்தரவின் பேரில் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காலையும் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் பழைய உடைந்த பாலம் பகுதியில் மாணவர்களை தேடினர். தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியில் காலை 11.30 மணியளவில் ஹரிபிரசாத் என்ற மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து மற்றொரு மாணவர் அபிராம் என்பவரை தேடி வந்தனர். இந்தநிலையில் மாலை 4 மணியளவில் அவரும் பிணமாக மீட்கப்பட்டார். இதனால் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion