திருச்சி: சமயபுரம் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை! களைகட்டும் பொங்கல்!
திருச்சி மாவட்டம், சமயபுரம் ஆட்டுச்சந்தையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று கூடும் ஆட்டு சந்தையில் சராசரியாக குறைந்த பட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுமார் ஒரு கோடி ரூபாயில் இருந்து ரூ.2 கோடி வரை ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும். இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் இந்த சந்தைக்கு வருவார்கள்.
இந்நிலையில், நேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை விற்பனை செய்வதற்காக 100-க்கான ஆட்டு வியாபாரிகள் காலையிலிருந்தே பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர்.
இந்நிலையில் ஒரு ஆடு சுமார் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க வந்த பொதுமக்கள் ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால் சிலர் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் வெளியூரில் இருந்து ஆடுகளைக் கொண்டு வந்த விற்பனையாளர்கள் சற்று வருத்தமடைந்தனர். இந்த சந்தையில் நேற்று சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வந்ததாகவும், சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்குவதற்காக அங்கு கூடியதால் நேற்று காலை அப்பகுதியில் சிறு சிறு கடைகள் முளைத்திருந்தன. இதன் காரணமாக அப்பகுதி களைகட்டி இருந்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்