சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா; பாதுகாப்பு பணி தீவிரம் - ஆட்சியர் பிரதீப்குமார்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இம்மாதம் மார்ச்.10ம் தேதி நடைபெறடவுள்ள பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் பிரதீப்குமார் பேசியதாவது: தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா முக்கிய திருவிழாவாகும். இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கின்றனர். போலீசார் பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் அன்று பக்தா்கள் கோயிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பாதயாத்திரை பக்தா்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சாிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் சமயபுரத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பேருந்து வசதி செய்ய வேண்டும்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவு ரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்டுச்சந்தை பிரிவு ரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீரமைக்க வேண்டும். மின்சார வாரிய அலுவலா்கள் தடையற்ற மின்சாரம் வழங்கவும், பழுது ஏதேனும் ஏற்பட்டால் உடன் நிவா்த்தி செய்யவும் தேவையான அளவில் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மருத்துவத்துறையினா் பொதுமக்கள் அவசர தேவைக்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவு வாயில், சமயபுரம் கோயில் செல்லும் கடைவீதி, போலீஸ் நிலையம் அருகில் உள்ள பகுதி, திருக்கோயில் திருமணமண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும். இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.நெடுஞ்சாலைத்துறையினா் சாலையின் இருமபக்கங்களிலும் குண்டும், குழிகளுமாக இருக்கும் சாலைகளை சீராக மண் நிரப்பி, எளிதாக பக்தா்கள் நடந்து செல்வதற்கு வகை செய்ய வேண்டும்.
தீயணைப்புத்துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள், தீயணைப்பு வீரா்கள் மற்றும் அலுவலா்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தா்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதி, ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் செய்து தர வேண்டும். போலீசாருடன் இணைந்து சுகாதாரமற்ற உணவு பொருள்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சுகாதாரப்பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவா்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து, தரமான உணவுகள் வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினா் உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்கக்கூடாது.கோயில் சிறப்பு பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். திருக்கோயில் பெருந்திட்ட வளாகப்பகுதியில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகாிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிகாணிக்கை செலுத்திய பக்தா்கள் குளிக்க ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் ஆகியன செய்து தர வேண்டும். பூச்சொரிதல் விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடக்க அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், கோயில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.