இனிவரும் காலங்களில்...சமூக வலைதளங்களில் தவறாக.. - போலீஸ் விடுத்த எச்சரிக்கை என்ன?
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை.
தற்போது டிஜிட்டல் உலகில் குற்றங்களும் அதிகம் டிஜிட்டலாக நடைபெறுகின்றன. தகவல் திருட்டுகளாக, பண மோசடிகளாக, சமூக வலைதள அவதூறுகளாக எனக் குற்றங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்த சைபர் குற்றங்கள் குறித்து எங்குப் புகார் அளிப்பது என நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மேலும், இவையெல்லாம் சைபர் குற்றங்கள் என பொதுவாக சில குற்றங்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் எவையெல்லாம் சைபர் குற்றங்களுக்குள் அடங்கும் எனத் தெளிவாக நமக்குத் தெரிவதில்லை.
குறிப்பாக நம் கையிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களான கைபேசி, இணையம், கணினி இவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அனைத்து குற்றங்களுமே சைபர் குற்றங்களுக்குள் தான் அடங்கும். உதாரணத்திற்கு சில குற்றங்களைச் சொல்லலாம்.
நீங்கள் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்கும்போது உங்களுக்கு அந்த பொருளை அனுப்பாமல் வேறு ஏதாவது பொருளை அனுப்புவது, உங்களுடைய கைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு ஃபோன் கால் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது தொந்தரவு தருவது, இணைய வழி பரிவர்த்தனையில் உங்கள் பணத்தைத் திருடுவது இவை அனைத்துமே சைபர் குற்றங்கள் ஆகும்.
சமூக வலைதளத்தினால் அதிகரிக்கும் குற்றங்கள்
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேசமயம் இளைஞர்கள் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
ஆகையால் சமூக வலைதளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்காக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக பண மோசடி ,ஆன்லைன் குற்றங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் சமூக வலைதளங்களை இளைஞர்கள் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருவதால் பல்வேறு சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் , அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம் சார்பில் MIET Engineering கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இணையவழி நிதிமோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும் அக்குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், சமூக வலைதள குற்றங்கள் பற்றியும், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் வலைதளமான www.cybercriyme.gov.in www.cybercriyme.gov.in மற்றும் M-kavache2 app மற்றும் இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் சமூக வலைதளங்களை முறைப்படி பயன்படுத்த வேண்டும். தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.