திருச்சி மைக்கேல்ஸ் & சன்ஸ் ஐஸ்கிரீம் கடை...அப்படி என்ன சிறப்பு வாங்க பார்க்கலாம்..!
திருச்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும், மைக்கேல்ஸ் அண்ட சன்ஸ் ஐஸ் கிரீம் கடையை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
திருச்சிக்கு பல்வேறு அடையாளம் இருந்தாலும், குழந்தை முதல் முதியவர் வரை கூறுவது மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை தான். அப்படி என்ன சிறப்பு வாங்க பார்க்கலாம்... திருச்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும், மைக்கேல்ஸ் அண்ட் சன்ஸ் ஐஸ்கிரீம் கடை. திருச்சி மெயின் கார்ட் கேட்டுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது இந்த மைக்கேல்ஸ். எனவே மலைக்கோட்டை வந்தால் இந்த ஐஸ்கிரீம் கடைக்கு போகாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இந்த ஐஸ்கிரீம் கடையில் அப்படி என்ன ஸ்பெஷல்? அதைப் பற்றி பார்ப்போம். பொதுவாகவே நாம் வெளியில் சென்று ஐஸ்கிரீம் கடையில் அமர்ந்து சாப்பிடும்போது அதன் விலையானது குறைந்தபட்சம் 20 ரூபாயில் இருந்து இருக்கிறது. ஆனால் இங்கு அனைத்துமே 20 ரூபாய்க்குள் முடிந்து விடும் என்றால் நம்ப முடியுமா? மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமின் ஆரம்ப விலையே 10 ரூபாயிலிருந்து தொடங்கி 15 ரூபாயில் முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இவற்றில் எந்த கலப்படமும் சேர்க்காமல் இவ்வளவு மலிவான விலையில் கிடைக்கும் போது இதை சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் மனது வராது. இங்கு தயாரிக்கும் ஐஸ்கிரீம் களில் எந்தவிதமான செயற்கை ரசாயனங்களும் சேர்க்கப்படாமல் சுத்தமான கறவை பாலில் தயாரிக்கப்படுகிறது என்று கடையின் உரிமையாளர் கூறுகிறார்.
1939ஆம் ஆண்டு இந்த மைக்கேல் ஐஸ்கிரீம் கடை ஒரு ஜூஸ் கடையாக துவங்கியது. அதன்பிறகு படிப்படியாக ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்ததாக கடையின் உரிமையாளர் கூறுகிறார். இந்த ஐஸ் கிரீம் வெறும் பாலில் சீனி மற்றும் எஸன்ஸ் மட்டும் கலந்து தயாரிக்கப்படுகிறது எந்தவிதமான செயற்கை ரசாயனங்கள் இதில் கலக்கப்படவில்லை என்றும் இப்போது திருச்சியில் மட்டும் எட்டு கிளைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு உணவு அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் முறையாக தயாரிக்கப்படுகிறது. சிலர் கூடுதலாக செயற்கை நிறமூட்டிகள், ரசாயனங்கள் சேர்ப்பார்கள் ஐஸ்கிரீம் உப்பலாக வர வேண்டுமென்று ஆக்சிஜன் கூட சேர்ப்பார்கள் ஆனால் அது போன்ற எந்த ஒரு பொருளும் நமது தயாரிப்பில் சேர்க்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் நம் வீட்டில் குழந்தைகளுக்கு எப்படி ஐஸ்கிரீம் தயாரிப்போமோ, அதனைப் போன்றே தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம் கடைக்கு நான்கு திசையிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள் இருப்பதால் எப்போதும் எந்த கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஐஸ்கிரீம் கடையாக இந்த மைக்கேல் அண்ட் சன்ஸ் ஐஸ்கிரீம் கடை அமைந்துள்ளது. ஏனென்றால், வீட்டிலிருந்து கொடுத்துவிடும் பாக்கெட் மணிக்கு ஏற்றார்போல் இந்த ஐஸ்கிரீம் கடையில் அனைத்தும் மலிவு விலையில் கிடைப்பதால், நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டே இங்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது, அவர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளது. பிறந்தநாள் என்றாலே ட்ரீட் வைப்பதற்கு மைக்கேல்ஸ்சை தேடித்தான் மாணவர்கள் வருகின்றனர். இங்கு வந்தால், 10 பேர் சாப்பிட்டாலும் 100 ரூபாயில் முடிந்துவிடும். மேலும் இதன் சுவையும் நன்றாக இருப்பதால் இந்த கடைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனாலேயே, வெளியூர்களில் இருந்து வருபவர்களும் இங்கு ஒருமுறையாவது ஐஸ்கிரீமை சாப்பிட்டு ருசி பார்த்துவிட வேண்டும் என்று ஆவலுடன் வந்து செல்கின்றனர். சுவையினாலும் தரத்தினாலும் மக்கள் தங்களது கடையை தேடி வருகிறார்கள். இதன் காரணமாக லாபம் குறைவாக இருந்தாலும் விலையை அதிகரிக்க தோன்றவில்லை என்றும் இதில் மனத்திருப்தி அதிகமாகவே கிடைக்கிறது, என்றும் மைக்கேல் அண்ட் சன்ஸ் உரிமையாளர் கூறுகிறார்.