திருச்சியில் காதல் ஜோடிகளுக்கு நடந்த கொடுமை; 4 காவலர்கள் போக்சோவில் கைது - நடந்தது என்ன..?
திருச்சி முக்கொம்பு பகுதிக்கு காதலனுடன் சென்ற 17 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த 4 காவலர்கள் மீது போக்சோவில் கைது .
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கண்ணாங்குடியை சேர்ந்த இளைஞரும் திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த காதல் ஜோடி சுற்றுலா தளங்களில் ஒன்றான திருச்சி முக்கொம்பு பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்கு திருவெறும்பூர் சரகத்தில் உள்ள தனிப்படையை சேர்ந்த திருவெறும்பூர் காவல்நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் உள்ள சங்கரபாண்டி, நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத், துவாக்குடி காவல்நிலைய போலீசார் சித்தார்த் ஆகிய 4 பேர் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்த காதல் ஜோடி, மது அருந்திய காவலர்களை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 4 காவலர்களும் முதலில் தகராறு செய்து பின்பு சிறுமி சோதனை செய்வதாக ஜீப்புக்குள் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து அந்த 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முசிறி திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் 4 நபர்களும் கைது செய்யப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையினரை சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் தகவல் :
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு நேற்று முன்தினம் (04.10.23) மாலை எவ்வித அனுமதியோ, விடுப்போ உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் சொல்லாமல் Honda என்ற சிகப்பு கலர் காரில் சாதராண உடையில் சென்ற ஜீயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார் (2021 Batch) (சொந்த ஊர் - திருப்பூர்), நவல்பட்டு காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் 258 பிரசாத்; (2018 Batch) (சொந்த ஊர் - கடலூர்), திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து எண்-6 ல் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 725 சங்கர் ராஜபாண்டியன் (2013 Batch) (சொந்த ஊர் - புதுக்கோட்டை), ஜீயபுரம் போக்குவரத்து காவல்நிலைய விட்டோடி காவலர் 1827 சித்தார்த்தன், (2021 Batch) (சொந்த ஊர் - கடலூர்) ஆகியோர் முக்கொம்பு பகுதியில் மது அருந்திவிட்டு காவிரி ஆற்றில் குளித்துவிட்டு மதுபோதையில் முக்கொம்பு பகுதியில் உள்ள ஒதுக்கு புறமான இடத்தில் இருந்த இரண்டு காதல் ஜோடிகளை வம்பு இழுத்து உள்ளனர். அதில் ஒரு காதல் ஜோடி இவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டதாக தெரிய வருகிறது.
மேலும், தனிமையில் இருந்த மற்றொரு ஜோடியான 17 வயது சிறுமி அவரது காதலர் 19 வயது இளைஞர் ஆகியோரை மிரட்டி அடித்து கஞ்சா விற்பனை செய்கிறீர்களா? என்றும் உங்களை விசாரனை செய்ய வேண்டுமென்றும் கேள்வி கேட்டு அந்த இளைஞரை விரட்டி அனுப்பி உள்ளனர். மேற்படி சிறுமியை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை வலுக்கட்டாயமாக மிரட்டி காரில் ஏற்றி உள்ளனர். மதுபோதையில் அத்துமீறி உடலை தொட்டு மிரட்டி பேசி அவரின் செல் எண்ணை பெற்றுள்ளனர். எப்போது அழைத்தாலும் போன் பேச வேண்டும், கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டியுள்ளனர். மேலும், அவரை பற்றிய விவரங்களை கேட்டு வீடியோ பதிவு செய்துள்ளனர். அவரின் காதலனை காவலர் பிரசாத் மற்றும் சித்தார்த் ஆகியோர் அடித்துள்ளார்கள். காரில் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் மு.நி.கா சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அவரின் உடலை தொட்டு முத்தமிட முயற்சி செய்துள்ளனர்.
பின்பு மாலை 6.00 மணிக்கு மேல் அந்த சிறுமி சத்தம் போடவும் அவரை காரை விட்டு கீழே இறக்கி விட்டதாக தெரிய வருகிறது. அந்த சிறுமி மற்றும் அவரது காதலனும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்கு ஓடி சென்று அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் மற்றும் த.கா 1085 சதீஸ்குமார் ஆகியோரிடம் நடந்த சம்பவம் தொடர்பாகவும், அவர்கள் காவல்துறையினர் என்று மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் மேற்படி பணியில் இருந்து இரண்டு காவலர்களும் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற போது முக்கொம்பு உள் பகுதியிலிருந்து மேற்படி Honda காரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் மெயின் ரோடு நோக்கி வந்தவர்களை பணியில் இருந்த காவலர்கள் காரை நிறுத்தி உள்ளே இருந்த உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம் விசாரித்த போது சசிகுமார் அவர்களிடம் நான் கஞ்சா விற்பனை தொடர்பாக அவர்களிடம் விசாரனை செய்தேன் வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
அப்போது காதலர்கள் இருவரும் நேரடியாக உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம் இங்கு பணியில் போலீசார் உள்ளனர் நீங்கள் யார் ? நீங்கள் எப்படி தவறாக நடந்து கொள்ளலாம் என்று கேட்டு வாக்கு வாதம் செய்துள்ளனர். அதற்கு உதவி ஆய்வாளர் சசிகுமார் அந்த இருவரையும் பார்த்து உங்கள் மீது கஞ்சா வழக்கு போடப் போகிறேன் ஒழுங்காக ஓடிவிடுங்கள் என்று அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் பயந்து கொண்டு முக்கொம்பு சுற்றுலா மையத்தில் நின்ற சத்திரம் செல்லக் கூடிய பேருந்தில் ஏறி சென்று விட்டதாக தெரிய வருகிறது. அப்போது பணியில் இருந்தவர்கள் விவரம் கேட்ட போதும் கூட சசிகுமார் மற்றும் காரில் வந்தவர்கள் சரியாக பதிலளிக்காமல் சென்று விட்டதாக தெரியவருகிறது. மேற்படி காவலர்களின் நடத்தை தொடர்பாக நேற்று 05.10.23 விசாரணை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காதலர்களிடம் தவறாக அத்துமீறி நடந்து கொண்ட 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் உதவி ஆய்வாளர் சசிகுமார் என்பவரை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள்.
காவலர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சிறுமியின் புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளீர் காவல் நிலைய குற்ற எண் 14/2023 ச/பி 9(a) (i) (iii) (iv), 9 (g), 10, 17, 13 (c), 14(5) POCSO ACT & 323, 341, 342, 506(i) IPC R/W 67 (B) (b) IT ACT-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகளான உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சங்கர் ராஜ பாண்டியன், பிரசாத் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.