ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - திருச்சியில் பரபரப்பு
திருச்சி மணிகண்டம் பகுதியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - யாசகரை தாக்கி பணத்தைப் பறித்து கொள்ளை கும்பல் வெறி செயலால் பரபரப்பு..
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கஞ்சா விற்பனை, போதை ஊசி விற்பனை, கள்ளத் துப்பாக்கி பதுக்கல் மற்றும் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை, பழிக்குபழி கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், எச்சரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்களை அச்சுறுத்து வகையில் மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இதற்கான ஏடிஎம் இயந்திரம் வங்கியின் முகப்பு பகுதியில் தனி அறையில் உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அந்த ஏடிஎம்மை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது ஏடிஎம் அலாரம் அடிக்கவே அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இது குறித்து ஏடிஎம் மேலாளர் மணிகண்டம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் வங்கி ATM இயந்திரம் கொள்ளை முயற்சி நடந்த பகுதி 7 மீட்டர் தள்ளி கம்பி போன்ற ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தம் பகுதியில் யாசகம் பெரும் முதியவர் ஒருவரை கொள்ளை கும்பல் தாக்கி அவர் வைத்து இருந்த படத்தை கத்தி முனையில் பறித்து சென்றுள்ளனர். மேலும் முதியவர் முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்தி கிடக்கும் காட்சியாக உள்ளது. இந்த ஏ.டி.எம் அறையில் இரவு காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.