திருச்சி - காரைக்குடி டெமு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது - பயணிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே
புதுக்கோட்டை வழியாக திருச்சி - காரைக்குடி ‘டெமு’ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது...
புதுக்கோட்டை வழியாக விருதுநகர்- திருச்சி பயணிகள் ரயில் இயங்கி வந்தது. மீட்டர் கேஜ் பாதை காலத்தில் இருந்து இந்த ரயில் சேவை உள்ளது. அகல ரயில் பாதை ஆன பின்பும் தொடர்ந்தது. திருச்சியில் இருந்து விருதுநகர் வரை உள்ள சுமார் 217 கி.மீ. கொண்ட ரயில் பாதையில் இந்த ரயில் 5.30 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயணமாகும். பயணிகள் ரயிலான இதில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 150 கி.மீ. மேல் இயங்கும் ரயில்களில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற ரயில்வே விதி உள்ளது. இருப்பினும் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் 2 எண்களை கொண்ட ரயிலாக சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதாவது திருச்சி-காரைக்குடி இடையே 76839/40 என்ற வண்டி எண்ணும், காரைக்குடி- விருதுநகர் இடையே 76837/38 என்ற வேறொரு ரயில் வண்டி எண்ணுடனும் ஒரே ரயில் பெட்டிகளுடன் தொடர்ந்து இயங்கும் ரயிலாக மாற்றப்பட்டது. இருந்தாலும் பயணிகளை பொறுத்தவரை இது விருதுநகர் - திருச்சி டெமு ரயில் என்றே அழைக்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி 'டெமு' ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலானது காரைக்குடியில் இருந்து விருதுநகருக்கு இணைப்பு ரெயிலாகவும் இயக்கப்பட்டது. அதனால் இதே ரெயிலில் திருச்சி-விருதுநகர் வரை பயணிகள் பயணிக்க முடியும். கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் விருதுநகர்-காரைக்குடி வரையிலான 'டெமு' ரெயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டது. காரைக்குடி-திருச்சி- காரைக்குடி இடையே 'டெமு' ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி-காரைக்குடி 'டெமு' ரெயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. திருச்சியில் இருந்து நேற்று மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 5 மணி அளவில் வந்தடைந்தது. அதன்பின் மாலை 5.02 மணிக்கு காரைக்குடி புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலானது திருச்சி-காரைக்குடி இடையே சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். காரைக்குடி-திருச்சி இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும். காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.20 மணிக்கு வந்து காலை 10.22 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு காலை 11.35 மணிக்கு சென்றடையும்.திருச்சி-காரைக்குடி 'டெமு' ரெயில் சேவை தொடங்கிய நிலையில் விருதுநகர் வரை இந்த ரெயிலில் பயணிகள் பயணிக்க முடியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்