திருச்சியில் அரிவாளை காட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சியில் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு சரித்திரபதிவேடு ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது..

திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வழிபறி தொடர் திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சரித்திர பதிவேடுகளில் இருக்கும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்கள் குற்ற செயலில் ஈடுபட முயற்சி செய்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் குற்றம் நடைபெறாமல் இருக்க அனைத்து காவல் நிலையத்திலும் பணியாற்றும் ஆளிநர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அரிவாளை காட்டி பணம் பறித்த இரண்டு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது.
இந்நிலையில் கடந்த 03.06.24-ந்தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வாஸ்நகர் 2வது தெரு பழைய பால்பண்ணை சர்வீஸ்ரோடு சந்திப்பில் இரவில், லாரி புக்கிங் ஆபீஸில் வேலை பார்க்கும் பணியாளர் நடந்து சென்றபோது, இரண்டு நபர்கள் அருவாளை கழுத்தில் வைத்து மிரட்டி, ரூ.5000/- பணத்தை பறித்து சென்றதாக புகார் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில், வரகனேரி பகுதியை சேர்ந்த பாபு (எ) மிட்டாய் பாபு, காமராஜ்நகரை சேர்ந்த தேவா ஆகியோர்கள் இக்குற்ற செயலில் ஈடுப்பட்டது விசாரணையில் தெரியவந்து. உடனடியாக அவர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், ரவுடி பாபு (எ) மிட்டாய் பாபு என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லையில் 1 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு, 2 கஞ்சா வழக்குகளும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கு, 1 திருட்டு வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 1 வழக்கு என மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்ற செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - காவல் ஆணையர் எச்சரிக்கை
மேலும் மற்றொரு ரவுடி தேவா என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லையில் கஞ்சா விற்பனை செய்ததாக 5 வழக்குகளும், 5 அடிதடி வழக்குகளும், 2 வழிப்பறி வழக்கும், மதுவிலக்கு பிரிவில் 1 கஞ்சா வழக்கும், கோட்டை காவல் நிலையத்தில் 1 அடிதடி வழக்கு என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, ரவுடிகள் பாபு (எ) மிட்டாய் பாபு மற்றும் தேவா ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.
அதனை தொடர்ந்து கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று ஆயுதங்களை காண்பித்து குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

