தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த விவசாயிக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: அதிரடி தீர்ப்பு!
விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதன் காரணமாக எழுந்த கடன் பிரச்சினைகளால் கடந்த 1.4.2017 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருச்சி: தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்ததால் கண்பார்வை பறிபோனவருக்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையளித்து கண் பார்வை இழக்க செய்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம் வழங்க திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் வட்டம் சிந்தலவாடி ஆண்டியப்ப நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன்(43). விவசாயி. இவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதன் காரணமாக எழுந்த கடன் பிரச்சினைகளால் கடந்த 1.4.2017 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து தெரிந்தவுடன் ரெங்கநாதனின் உறவினர்கள் அவரை மீட்டு, முசிறி வட்டம் துறையூர் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த தனியார் மருத்துவமனையில் ரெங்கநாதனுக்கு 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்காக ரெங்கநாதன் குடும்பத்தினர் ரூ.9 லட்சம் கட்டணமாக செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சையின் போது ரெங்கநாதனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழாய் பொருத்தப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, ரெங்கநாதனுக்கு இரு கண்களிலும் கண்பார்வை பறிபோனது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உயிரை காப்பாற்ற இத்தனை லட்சம் கடன்பட்டு நாங்கள் கட்டணம் செலுத்தி உள்ளோம். ஆனால் கண்பார்வை பறிபோய் விட்டதே என்று ரெங்கநாதன் குடும்பத்தினர் வேதனையடைந்துள்ளனர். இதை தொடர்ந்து ரெங்கநாதனுக்கு உடல் நிலை மோசமானது.
எனவே திருச்சியிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் முறையான சிகிச்சையளிக்காததால்தான் கண் பார்வை பறிபோய் விட்டது என்று ரெங்கநாதன் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதற்கு சிகிச்சையளித்த மருத்துவமனையே காரணம் என்பதால், ரெங்கநாதன் முசிறி மருத்துவமனை மீது, கடந்த 15.11.2022ல் திருச்சி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ரெங்கநாதன் தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார். இந்த வழக்கு திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர் சேகர், உறுப்பினர் செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. நுகர்வோர் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரெங்கநாதனுக்கு முசிறி மருத்துவமனை சேவை குறைபாடு மற்றும் கவனக்குறைவு சிகிச்சை ஆகியவற்றுக்காக கண் பார்வையை இழந்த ரெங்கநாதனுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சமும், மருத்துவ சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட ரூ.9 லட்சத்து 91 ஆயிரத்து 391, வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.39 லட்சத்து 91 ஆயிரத்து 401 தொகையை 45 நாட்களுக்குள், 9% சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு பொது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. விவசாயி ஒருவர் கடன் பிரச்னைக்காக விஷம் குடித்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்ற நிலையில் பார்வை பறிபோகும் அளவிற்கு தவறான சிகிச்சை அளித்த அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சரியான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்தாலும் பறிபோன பார்வை பறிபோனதுதானே என்று என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.





















